மதுரையில் அமைகிறது தென் தமிழ்நாட்டிற்கான முதல் எலும்பு வங்கி!

  -MMH

   தென் தமிழ்நாட்டில் முதன் முறையாக மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கும் பணியை, மக்கள் நல்வாழ்வுத்துறை துவக்கியுள்ளது.

வாகன விபத்துகளில் கை, கால்களில் முறிவு ஏற்படுவோருக்கும், எலும்பு புற்றுநோய் மற்றும் பல்வேறு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளை மாற்றுவதற்காக தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது.

தென் தமிழகத்தில் எலும்பு வங்கி இல்லாததால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்ற எலும்பு வங்கி வசதி இல்லை.

இதையடுத்து மதுரையில் எலும்பு வங்கி அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. பின்னர், 2017ஆம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கச் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்கியது.

ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து, நேற்று மதுரை ராஜாஜி மருத்துவ மனையிலும் எலும்பு வங்கி அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கியுள்ளது.

இது குறித்து எலும்பு முறிவு சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் அறிவாசன் கூறுகையில், “புற்றுநோய் பாதிப்பு, விபத்துகள் மற்றும் கட்டிகள் இருக்கும் எலும்புகளை அகற்றுகிறோம். அதற்குப் பதிலாக அந்த இடத்தை நிரப்ப எலும்பு வங்கியில் பாதுகாக்கப்படும் எலும்பைப் பயன்படுத்தலாம். வங்கியில் 2 விதமாக எலும்புகளை சேகரிக்கிறோம். மூளைச்சாவு ஏற்படுவோர், விபத்தில் அடிபட்டவர்களின் உறுப்புகள் அகற்றப்பட்டால் எலும்புகளை தானமாகப் பெறலாம். எலும்பை கிருமி நீக்கி, மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் பல ஆண்டுகள் பாதுகாக்கலாம். அதற்கான உபகரணங்கள் மற்றும் தடையில்லா மின்சாரம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

- மதுரை வெண்புலி.

Comments