புலவர் புலமைப்பித்தன் காலமானார்!

  -MMH

   உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புலவர் புலமைப்பித்தன் காலமானார். அவருக்கு வயது 85.

புலமைப்பித்தன் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி கோவையில் பிறந்தவர். இவர் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக 1964ஆம் ஆண்டு சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். புலமைப்பித்தன் எம். ஜி. ஆரால் அரசவைக் கவிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

இவர் 2001இல் தமிழக அரசின் பெரியார் விருதை பெற்றார். அதே போல் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 1968 முதல் 2010ஆம் ஆண்டு வரை இவர் திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததால் அவர் காலமானார்.

அடையாறு மலர் மருத்துவமனையில் அவர் காலமானார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் எடுத்துச் செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

- Ln இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்

Comments