பெண் காவலர் பாலியல் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து, கரிசல்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்!

 

-MMH

         சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் கரிசல்பட்டியில், டெல்லி பெண் காவலர் பாலியல் படுகொலை சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்த சபியா ஷைஃபி. இவர் டெல்லியில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி பணிக்கு சென்று வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் போலீசில் புகாரளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலின் பல இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் டெல்லி மட்டுமில்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைத்திடவும், கொலைக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் கோரி, கரிசல்பட்டி கடைவீதியில் நேற்று மாலை கரிசல்பட்டியின் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைத்தலைவர் முஜாஹித்தீன் தலைமை வகித்தார். மேலும், திருப்பத்தூர் தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் முகமது ஆரிப், அப்துல் ஜமீல் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் சிங்கம்புணரி பகுதி தலைவர் அன்வர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பத்தூர் தொகுதி முன்னாள் தலைவர் உபைசுல் கருணை வரவேற்புரை நிகழ்த்தி கண்டன கோஷமெழுப்பினார். தொடர்ந்து, எஸ்டிபிஐ மாவட்டப் பொதுச்செயலாளர் அப்துல் ரஜாக் மிஸ்பாஹி கண்டன உரை நிகழ்த்த, இறுதியாக கிளை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ரஷீத் நன்றியுரையுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-அப்துல்சலாம், திருப்பத்துர்.

Comments