போக்சோ' சட்டம் குறித்த, விழிப்புணர்வு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைப்பெற்றது.!!

  -MMH

   மேட்டுப்பாளையம்;"குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது என, பெற்றோர் எடுத்துக்கூறவேண்டும்" என்று, போக்சோ சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.பி., செல்வநாகரத்தினம் பேசினார்.கோவை மாவட்ட போலீஸ், காரமடை ரோட்டரி சங்கம் சார்பில், 'போக்சோ' சட்டம் குறித்த, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

மருதுார் ஊராட்சிக்குட்பட்ட கே. புங்கம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினம் தலைமை வகித்தார்.அவர் பேசியதாவது:குழந்தைகளுக்கு கல்வி, பாதுகாப்பு ஆகியவை கட்டாயம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதேநேரத்தில், குழந்தைகள் நலனில், மிகவும் கவனமுடன் அக்கறை செலுத்த வேண்டும். படிக்கும் பருவத்தில் உடல், மன ரீதியாகவும் அவர்களை கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு, பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளிடம், குறிப்பாக பெண் குழந்தைகளிடம் அன்பாக பேசி, நடந்து கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளை தேவையில்லாமல் தொடக்கூடாது. குழந்தைகளுக்கு, நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது என, பெற்றோர் எடுத்துக் கூறவேண்டும்.

பாலியல் குற்றம் ஏதேனும் நடந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, எஸ்.பி., பேசினார்.நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.,ஜெய்சிங், துடியலுார் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம், காரமடை ரோட்டரி சங்க தலைவர் ஞானசேகரன், இமயம் ஹோம் உறுப்பினர் மீனாட்சி, மருதுார் ஊராட்சி தலைவர் பூர்ணிமா, மாவட்ட கவுன்சிலர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர். கடந்த, 6 மாதங்களில், காரமடை போலீஸ் எல்லைக்குள், 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments