மதுரை மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி! மதுரையில் பரபரப்பு!

-MMH

வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தர தாமதம் செய்ததால், மதுரை மாவட்ட ஆட்சியரின் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது. மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக 1987ஆம் ஆண்டு சிலருக்குச் சொந்தமான 99 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. வீட்டுவசதி வாரியம் சார்பில் அப்போதையமதுரை வருவாய் கோட்டாட்சியர் நீலக்கல், நிலங்களை கையப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார்.

உரிய காலகட்டத்தில் இழப்பீடு வழங்காததால், 1984ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பின்படி முதல் கட்டமாக 1999ஆம் ஆண்டு 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இழப்பீடு முழுமையாக வழங்கப்படாத காரணத்தால் நில உரிமையாளர்கள் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம், ஆகஸ்ட் 9 ஆம் தேதி 8 இலட்சத்து 70 ஆயிரத்து 166 ரூபாய் 30 காசுகள் இழப்பீடு தொகைக்காக மாவட்ட ஆட்சியரின் 6 வாகனங்களையும் மற்றும் அலுவலக பொருட்களையும் ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நில உரிமையாளர்களின் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஆட்சியர் பயன்படுத்தும் இன்னோவா காரின் முன்பகுதியில் ஜப்தி செய்யப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவை ஒட்டினர்.

இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக நில உரிமையாளர்களின் வழக்குரைஞர்களுடன், வருவாய்த்துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை ஒரு வாரத்திற்க்குள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்ததால் ஜப்தி நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

மாவட்ட நிர்வாகத் தரப்பு மற்றும் வழக்கறிஞர் குழு இடையே 6 மணி நேரமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு வாரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுமென எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு கடிதம் கொடுத்ததையடுத்து, ஜப்தி செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சியரின் வாகனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-மதுரை வெண்புலி.

Comments