வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம்! தூங்கிக் கொண்டிருந்த சிறுமிகளின் போர்வையை இழுத்து அடாவடி!!

    -MMH

வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பன்னிமேடு, சங்கிலி ரோடு, முத்து முடி, நல்ல முடி, ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரண்டு குட்டிகளுடன் தாய் யானை உலா வந்தது. அவை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை  சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

தொடர்ந்து சோலையார் எஸ்டேட், சிலுவை மேடு, சிறுவனச்சோலை, பகுதியில் இருந்த அந்த யானைகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈட்டியார் எஸ்டேட் தேயிலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்தன. அப்போது உபாசி மற்றும் கல்லார் எஸ்டேட் பகுதியில் புகுந்த வேறு ஒரு காட்டு யானை கூட்டத்தை விரட்ட வனத்துறையினர் சென்றிருந்தனர்.

இதனால் ஈட்டியார் பகுதியில் புகுந்த அந்த மூன்று காட்டு யானைகள் அங்கிருந்த ரேஷன் கடையை உடைத்து அங்கிருந்த அரிசியை சாப்பிட்டன.  தொடர்ந்து மணியம்மா என்பவரின் வீட்டின் கதவை உடைத்து அட்டகாசம் செய்தன.  அதில் ஒரு காட்டு யானை துதிக்கையை வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த  சிறுமிகள் போர்த்தியிருந்த போர்வையை பிடித்து இழுத்தது உடனே பயந்துபோன சிறுமிகள் கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கூச்சலிடும் தீப்பந்தம் காட்டியும் காட்டு யானைகளை விரட்டினர் .அப்போது சுகந்தி என்பவரின் வீட்டு கதவை சேதப்படுத்தி விட்டு காட்டுயானைகள் சென்றன. இந்த சம்பவம் தொழிலாளர்கள், மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-கோவை மாவட்ட தலைமை நிருபர்,

S.ராஜேந்திரன்.


Comments