வனப்பகுதியில் ஆம்புலன்சில் பிரசவம்!! - முன்னெச்சரிக்கையாக யோசித்து செயல்பட்ட ஊழியர்களுக்கு பாராட்டு!!

  -MMH

    மேட்டுப்பாளையம்: வனப்பகுதியில் ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது. '108' ஊழியர்கள் சமயோசிதமாக செயல்பட்டு, குழந்தையை பரிசலிலும், தாயை மற்றொரு ஆம்புலன்சிலும் கொண்டு சென்று, பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். 

சிறுமுகை லிங்காபுரம் அருகே உள்ள, காந்தவயல் மேலுாரை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி தீபா, 27. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று காலை, 6:30 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காந்தை ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால், கர்ப்பிணி பெண்ணை, பரிசலில் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு ஆம்புலன்ஸ் வண்டிகள், மேலுாருக்கு சென்றன. ஒரு ஆம்புலன்ஸ் காந்தை ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டது.

மற்றொரு ஆம்புலன்ஸ், லிங்காபுரத்திலிருந்து, வனப்பகுதி சாலை வழியாக, காந்தவயல் மேலுாருக்கு சென்றது. கர்ப்பிணி பெண் தீபா, ஆம்புலன்சில் ஏறியதும், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, வனப்பகுதியில் பல கி.மீ.,சுற்றிச் செல்ல தாமதமாகும் என்பதால், குழந்தையை பரிசலில் ஏற்றி, ஆற்றின் மறு கரையில் இருந்த, மற்றொரு ஆம்புலன்சில் சேர்த்தனர். 

அந்த ஆம்புலன்சில், குழந்தை, சிறுமுகை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதேசமயத்தில், தாய் தீபா, ஆம்புலன்ஸ் வாயிலாக, வனப்பகுதியில் சுற்றி அழைத்துச் செல்லப்பட்டு, சிறுமுகை சுகாதார நிலையத்தில், அனுமதிக்கப்பட்டார். அங்கு, குழந்தைக்கும், தாய்க்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து,'108' ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் நந்தகோபால் கூறுகையில், "கடந்த ஆண்டு இதே போன்று காந்தை ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தபோது, வனப்பகுதிக்குள், ஆம்புலன்சை ஓட்டிச்சென்று கர்ப்பிணி பெண்ணை மிகுந்த சிரமத்திற்கு இடையே அழைத்து வந்தோம். அந்த அனுபவம் இருந்ததால், இந்த முறை இரண்டு ஆம்புலன்ஸ்களை எடுத்துச் சென்றோம். ஒன்றை ஆற்றின் மறுகரையில் நிறுத்தியும், மற்றொன்றை வனப்பகுதிக்குள் ஓட்டிச் சென்றும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டோம். தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்தோம்" என்றார் முன்னெச்சரிக்கையாக யோசித்து, இரு ஆம்புலன்களைப் பயன்படுத்தி, தாயையும், சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களை, மலைவாழ் மக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். 

-சுரேந்தர்.

Comments