இன்று ஆசிரியர் தினம். எழுத்தறிவித்த இறைவராம் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துவோம்.!

-MMH
         செப்டம்பர் 5, நாடெங்கிலும் எழுத்தறிவித்த இறைவனாம் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்தி "ஆசிரியர் தினமாகக்" கொண்டாடப் படுகிறது. ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி,  எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர். சர்.  ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளே ‘ஆசிரியர் தினமாக’ செப்டம்பர் 5-ம் தேதி, ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. 

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார். ஒரு ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணி. அப்படிப்பட்ட தெய்விகப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக உள்ளவர்கள்தான் ஆசிரியர்கள்.

டாக்டர் ராதாகிருஷ்ணனை அவரது நண்பர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் அணுகி அவரது பிறந்த நாளைக் (செப்டம்பர் 5 ஆம் தேதி) கொண்டாட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது, "எனது பிறந்த நாளை தனித்தனியாக கொண்டாடுவதற்கு பதிலாக, செப்டம்பர் 5 ஆம் தேதியை இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாக கடைப்பிடித்தால் அது எனது பாக்கியமாகவும், பெருமை மற்றும் மரியாதையாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்திய குடியரசுத்தலைவரிடமிருந்து வரும் அத்தகைய வேண்டுகோள் ஆசிரியர்கள் மீது அவர் கொண்டுள்ள பாசத்தையும், கற்பித்தல் தொழிலில் அவர் கொண்டிருந்த அன்பை தெளிவாகக் காட்டியதுடன், ஆசிரியர்கள் சமூகத்தின் சிற்பியாகவும், அவர்கள் இல்லாமல் எந்த சமூகமும் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடியாது என்பதை உணர்ந்து உணர்த்திய அந்த களங்கமற்ற உள்ளத்தின் வேண்டுதலின் விளைவே இந்த ஆசிரியர் தினம்.

அறியாமை இருள் நீக்கி  அறிவெனும் ஒளியேற்றி, வெறும் தாளாய் இருந்த நம்மை ஒரு புத்தகமாய் வெளிக் கொணர்ந்த ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குவோம்.

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments