சூலுார் விமானப்படை தளத்தில் முதல்முறையாக, 14 தேஜஸ் விமானங்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி!!

  -MMH

  கோவை : சூலுார் விமானப்படை தளத்தில் முதல்முறையாக, 14 தேஜஸ் விமானங்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.கோவை, சூலுார் விமானப்படை தளமானது, தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் மிக முக்கிய பயிற்சி மையமாகவும், போர் விமானங்கள் மற்றும் இலகுரக போர் விமானங்கள் செல்லும் முக்கிய மையமாகவும் உள்ளது.

தற்போது இந்த விமானப்படை தளத்தில், கூடுதலாக ஒரு ஓடுபாதை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சூலுார் விமானப்படை தளத்தில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இலகுரக போர் விமானமான தேஜஸ் படைப்பிரிவு உள்ளது.இங்கு மேம்படுத்தப்பட்ட 'தேஜஸ் எம்.கே-1 எப்.ஓ.சி., என்ற படைப்பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில், 16 போர் விமானங்கள், 4 பயிற்சி விமானங்கள் இடம்பெற்றுள்ளன. வானில் பறக்கும்போதே எரிபொருள் நிரப்பும் திறன், தலா, 200 கிலோ எடை கொண்ட, 4 ஏவுகணைகள் உட்பட கூடுதல் ஆயுதங்களை ஏற்றி செல்லுதல், எளிதில் கையாளும் வசதி, அதிநவீன மென்பொருளுடன் கூடிய தொழில்நுட்பம் என, பலவகை சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.இச்சூழலில் முதல்முறையாக, 14 தேஜஸ் விமானங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சி, நேற்று, சூலுார் விமானப்படை தளத்தில் நடந்தது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பல்வேறு வகையான அணிவகுப்பு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.இதுகுறித்து, இந்திய விமானப்படை நேற்றிரவு வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில், 'முதல்முறையாக இந்திய விமானப்படையின், 14 தேஜஸ் விமானங்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி, சூலுார் விமானப்படை தளத்தில் நடந்தது. எச்.ஏ.எல்., மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி துறையின் உதவியின்றி இது சாத்தியமல்ல'என, குறிப்பிடப்பட்டிருந்தது.

-சுரேந்தர்.

Comments