உரிமங்களை புதுப்பிக்காத உணவு விடுதிகள் மேல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

 

-MMH

    கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் பொள்ளாச்சியில் ஓட்டல் உரிமையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவகங்களில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உணவகங்களில் பணிபுரியும் நபர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அனைத்து உணவகங்கள், ரெஸ்டாரண்ட், பேக்கரிகளில் பாதுகாப்பான முறையில் உணவு வழங்குவது குறித்து தர நிர்ணய செய்வதற்கு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு நிறுவனங்கள் மற்றும் கார வகைகள் தயாரிக்கும் போது மீண்டும், மீண்டும் அதே எண்ணெயை பயன்படுத்துவதால் அதிகளவு கெட்ட கொழுப்பு உருவாகிறது. இதன் காரணமாக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குடல் அலர்சி, கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. எனவே ஒரு முறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உணவு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

இதை மீறும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனைத்து உணவகங்களில், விடுதிகளில் பயன்படுத்த உகந்த அதிகப்படியான உணவினை வீணாக்காமல் ஏழை, எளியோருக்கு வழங்க வேண்டும். இதற்கு உரிய தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ரசீதில் உணவக உரிமத்தின் எண்ணை குறிப்பிட வேண்டும். புதிதாக உரிமம் பெறாமலும், காலவதியான உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்தால் அந்த உணவகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புதிய உரிமம் மற்றும் உரிமம் புதுப்பிக்க ஆன்லைன் மூலம் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். புதுப்பிக்காமல் பழைய எண்ணை வைத்து பில் போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்புராஜ், வேலுச்சாமி, காளிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S. ராஜேந்திரன்.

Comments