சிங்கம்புணரி அருகே சாலையோர கால்வாய் நீரில் விழுந்து முதியவர் பலி!!

      -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சேர்ந்தவர் இராமலிங்கம் மகன் சுகுமாரன்(60). இவர் தனது வீட்டில் அவரது மனைவியுடன் சேர்ந்து பால் மாடுகளை வைத்து பராமரித்து வந்திருக்கிறார். சுகுமாரன் நேற்று காலையிலிருந்து காளாப்பூரில் உள்ள மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 

அதன்பின்பு மாலை, எஸ்.வி.மங்கலத்திலிருந்து பிரான்மலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போது அளவுகடந்த போதையால் கால் இடரி சாலையோர கால்வாயில் இருந்த மழை நீரில் முகம் புதைய விழுந்து, மூச்சுத்திணறி இறந்துள்ளார். இரவு 8 மணியளவில் அந்தச் சாலையை கடந்த சிலர், அவரது குடும்பத்தினருக்கும், எஸ்.வி.மங்கலம் காவல்துறையினருக்கும் தகவல் தெரியப்படுத்தியுள்ளனர். 

விரைந்து வந்த காவல்துறையினர் சுகுமாரனின் உடலை கைப்பற்றி, சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். சுகுமாரனின் மகன் சரத்குமார் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் விஜயன், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

-ராயல் ஹமீது, அப்துல்சலாம்.

Comments