கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள்!! கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை!!

 -MMH

பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குளி பி.ஏ.பி.ரோடு பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒரு வீட்டின் முன் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அக்கம், பக்கத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு சேகரித்தது தெரியவந்தது. 

மேலும் சேகரித்த ரேஷன் அரிசியை கடத்தி செல்வதற்கு மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதற்கிடையில் போலீசார் வருவதை பார்த்ததும் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த நிலையில் போலீசார் கடத்தல்காரர்கள் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தியதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள், வீதிகளில் சோதனை மேற்கொண்டனர். 

மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து சுமார் 22 மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments