ராமேசுவரம்-மதுரை ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கியது!! பயணிகள் மகிழ்ச்சி!!

       -MMH

கொரோனா பரவலையொட்டி நாடு முழுவதும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்தவுடன் படிப்படியாக முன்பதிவு செய்து பயணம் செய்யும் சிறப்பு விரைவு ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து வாரணாசி, புவனேஸ்வர், ஓகா, பைசாபாத், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மட்டும் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறைந்து பல மாதங்களுக்கு மேலாகியும் மதுரை-ராமேசுவரம்- மதுரை பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் ராமேசுவரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வர்த்தகம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மதுரையை நம்பியே உள்ளதால் ரெயில் போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து மதுரை-ராமேசுவரம்- மதுரை இடையேயான முன்பதிவில்லா சிறப்பு பயணிகள் ரெயில் போக்குவரத்து இன்று முதல் (7-ந்தேதி) தொடங்கியது.

முதல் கட்டமாக இன்று காலை ராமேசுவரத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயில் பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ்மதுரை ரெயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும். தினசரி காலை 5.40 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 9.10 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 8 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை. 18 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம்-மதுரை இடையே பயணிகள் ரெயில்கள் தொடங்கியதால் பயணிகள் குறிப்பாக தினசரி அலுவலகம், தனியார் நிறுவனங்களுக்கு வந்து செல்லும் அலுவலர்கள், தொழிலாளர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், வியாபாரிகள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் நெல்லை தென்காசி மற்றும் நெல்லை திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்களையும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் 

-அன்சாரி, நெல்லை.

Comments