தொழிலதிபரிடம் 17 லட்சம் மோசடி! சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை!!

   -MMH 

   கோவை ரத்தினபுரி சங்கனூர் காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் மேத்யூ  (வயது 38). தொழில் அதிபர். இவர் ரத்தினபுரியில் தேங்காய் பருப்புக ளை பிரித்து எடுக்கும் எந்திரங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். 

இவர் தனது நிறுவனம் குறித்து இணையதளங்களில் விளம்பரம் செய்து இருந்தார். இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள டோகோ நாட்டில் இருந்து அவருக்கு ஒரு இ-மெயில் வந்தது. 

அதில், தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் எந்திரங்களை ரூ.9 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கி ஒரு நிறுவனத்துக்கு கொடுக்க உள்ளதாகவும், அதற்கு 2 சதவீதம் வரை கமிஷன் தரவேண்டும். கூடுதல் தகவலுக்கு வாட்ஸ் -அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

இதை உண்மை என நம்பிய மேத்யூ, அந்த வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர், உங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் எந்திரங்களை டெண்டர் அடிப்படையில் ஒரு நிறுவனத்துக்கு வாங்கி கொடுக்க ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 114-ஐ கமிஷனாக தரவேண்டும் என்று கூறி அந்த தொகையை செலுத்த வங்கி கணக்கு எண்ணையும் கூறினார்.

உடனே மேத்யூ அவர் கொடுத்த வங்கி கணக்கு எண்ணில் 13 தவணைகளாக ரூ.17 லட்சத்து 17 ஆயிரத்து 114-ஐ செலுத்தினார். பின்னர் அவர், தனக்கு வந்த மெயில் முகவரி மற்றும் வாட்ஸ்-அப் எண்ணை தொடர்பு கொண்டார். அதற்கு எந்த பதிலும் இல்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மேத்யூ கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நீதிபதி,

-S.ராஜேந்திரன்.

Comments