அதிமுகவைக் கரைக்கிறதா பாஜக? அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் விரக்தி!

 

-MMH

    பொதுவாக இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு கட்சியிலிருக்கும் முக்கிய பிரமுகர்கள் மற்றொரு கட்சிக்குத் தாவ நினைத்தால், கூட்டணி தர்மத்தை கருத்தில்கொண்டு அவர்களை அந்த அரசியல் கட்சி ஏற்றுக் கொள்ளாது. இது பொதுவான நடைமுறை. ஆனால், தற்போது அதிமுக - பாஜக இடையே கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக பிரமுகர்களை சுற்றிவளைக்கும் வேலையை பாஜக செய்து கொண்டிருக்கிறது என அதிமுக தொண்டர்கள் விரக்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

திருப்பூரில் நேற்று பாஜகவின் அகில இந்தியத் தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்ட மாநில செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் வழிகாட்டும் குழுவின் உறுப்பினரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரும், மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான மாணிக்கம் மற்றும் முன்னாள் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சோழன் சித.பழனிச்சாமி ஆகியோரை பாஜகவில் இணைத்து அதிமுகவை பாஜகவில் கரைக்கும் வேலை துவங்கப்பட்டுள்ளது. இருவரும் பாஜகவில் இணைந்த நிகழ்ச்சியில், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிப் பணியை அதிமுகவைவிட பாசகவே சிறப்பாகச் செய்கின்றது என சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தலைவர் ஒருவர் பேசியிருப்பதையும் இதனோடு பொருத்திப் பார்த்தால் வட மாநிலங்களில் தனது தோழனின் தோளை அழுத்தி, தான் மட்டும் எழும்பும் தனது வழக்கத்தைத் தமிழ்நாட்டிலும் பாஜக துவங்கிவிட்டதாகவேத் தெரிகின்றது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இச்சூழலிலும் பாஜக இதுபோன்ற செயல்களில் துணிந்து ஈடுபடுவதைக் கண்டிக்க இயலாத நிலையில், அதிமுக தொடருமேயானால் அதிமுக எனும் மக்கள் செல்வாக்குப்பெற்ற கட்சியின் நிலை, காணல் நீராகிப் போய்விடும் என அதிமுகவின் தீவிர விசுவாசிகள் அவர்களுக்கு இடையே கருத்து பரிமாறி வருகிறார்கள். தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் தமிழகத்தில் திமுக மட்டுமல்லாது, அதிமுகவும் காப்பாற்படப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் உயிர்ப்போடு இருப்பதென்பது சமூகநீதிக் களத்திற்கும், தமிழ்நாட்டின் அரசியல் பாரம்பரியம் காப்பறப்படுவதற்கும் உந்துதலாக இருக்கும் என்பது தமிழ்நாட்டின் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிமுக கரையுமா, தழைக்குமா என்பதைக் காலம் முடிவு செய்யும்.

-மதுரை வெண்புலி.

Comments