அடுத்த பத்தாண்டுகளுக்கான கிரிக்கெட் தொடர் ஐசிசி வெளியிட்டது!!

   -MMH 

  2023, 2026, 2029 ஐசிசி உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் இந்தியாவில்… அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடர்கள் நடைபெறும் நாடுகள் பட்டியல் வெளியீடு:

2031ஆம் ஆண்டு வரை, அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐசிசி தொடர்கள் எந்தெந்த நாடுகளில் நடைபெறும் என்கிற முழு பட்டியலை வெளியிட்டிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

2021ஆம் ஆண்டு நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. கட்டுப்பாடுகள் காரணமாக கடைசி நேரத்தில் இந்தியாவிற்கு மாற்றப்பட்டாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. ஆதலால், 2022ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவிற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு, அதாவது 2031ஆம் ஆண்டு வரை ஐசிசி தலைமையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த நாடுகளில் நடைபெறவிருக்கிறது என்பதற்கான முழு பட்டியலை வெளியிட்டிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

2017ம் ஆண்டிற்கு பிறகு,  2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் கொரோனா காரணமாக ரத்தானது. இந்நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படும் என்றும் அந்த தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் ஐசிசி தரப்பு தெரிவித்திருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியின் நடப்பு சாம்பியனாக பாகிஸ்தான் அணி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 10 ஆண்டுகளில் 4 டி-20 உலகக்கோப்பைகள், இரண்டு 50 ஓவர் உலகக் கோப்பைகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் என மொத்தம் 8 ஐசிசி தொடர்கள் எந்தெந்த நாடுகளில் நடைபெறும் என்கிற பட்டியலில் வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 12 நாடுகள் இந்த 8 ஐசிசி தொடர்களை ஏற்று நடத்துகின்றன.

2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இணைந்து நடத்துகின்றன. 2028ஆம் ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்தும், 2030ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் இணைந்தும் நடத்துகின்றன.

2023ஆம் ஆண்டுக்கான 50 ஓவர்கள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. அதேபோல் 2027ஆம் ஆண்டுக்கான 50 ஓவர்கள் உலகக் கோப்பை தொடரை ஜிம்பாப்வே, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. மேலும் 2031ஆம் ஆண்டுக்கான 50 ஓவர்கள் உலகக் கோப்பையை இம்முறை இந்தியா வங்கதேச நாட்டுடன் இணைந்து நடத்துகிறது.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிலும், 2029ஆம் ஆண்டு இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது.

அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இந்தியா 3 ஐசிசி தொடர்களை நடத்துகிறது. அவை முறையே 2023 மூன்றாம் ஆண்டு 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடர், 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2029 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்கள் ஆகும்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப் கோவை.

Comments