மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட மாநாடு நிறைவு! புதிய நிர்வாகிகள் தேர்வு!

   -MMH 

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட 23ஆம் மாநாடு இரண்டு நாள் மாநாடாக கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் பசுமலையில் இலட்சுமணன் - சுந்தரம் நினைவரங்கத்தில் நடைபெற்றது. 

இதன் துவக்க நிகழ்வாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதும்பு கிராம தியாகிகள் நினைவுச் சுடரை மாநிலக்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கமும், துவரிமான் கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கே.பி.ஜானகியம்மாள் நினைவுச் சுடரினை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமதுவும், கருவேப்பிலை கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட தூக்குமேடை தியாகி பாலு கொடியை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனும் பெற்றுக்கொண்டனர். 

தொடர்ந்து, மாநாட்டுக் கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரவிந்தன் ஏற்றிவைக்க, தியாகிகள் நினைவு மேடைக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த மாநாட்டிற்கு தேவராஜ், பாலுச்சாமி, தவமணி ஆகியோரின் பெயரில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. இம்மாநாட்டினை மாநில செயற்குழு உறுப்பினர் நூர் முகமது துவக்கிவைத்தார்.

மாநாட்டில் பொதும்பு தியாகிகள் குடும்பத்தை கௌரவிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொதும்பு வீரணன் எழுதி, என்.இராமகிருஷ்ணனால் தொகுத்துத் தரப்பட்ட "ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை" எனும் நூலினை கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் இரா.விஜயராஜன் வெளியிட, பொதும்பு மகேந்திரன், கிராமத்தின் தோழர்களுடன் பெற்றுக்கொண்டார். 

தோழர் ஶ்ரீரசாவால் தொகுக்கப்பட்ட மேனாள் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மறைந்த என்.நன்மாறனை நினைவு கூறும் விதமாக, 'மேடைக்கலைவாணர் என்.நன்மாறன் - நினைவுகளின் சித்திரம்' புத்தகமும் வெளியிடப்பட்டது.

தொடர்ச்சியாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மாநாட்டினை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளராக கே.ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவருடன் எஸ்.கே.பொன்னுத்தாய், பா.ரவிச்சந்திரன் , டி.செல்லக்கண்ணு, எஸ்.பி.இளங்கோவன், வி.பி.முருகன், செ.முத்துராணி, வி.உமாமகேஸ்வரன், எஸ்.பாலா, பி.ஜீவானந்தம், எஸ்.கார்த்திக் ஆகிய 11 பேர் புதிய மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்பின்பு, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராக செயலாற்றிய சி.ராமகிருஷ்ணன் கௌரவிக்கப்பட்டார். 

நிறைவுரையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் நிகழ்த்த இரண்டு நாள் மாநாடு நிறைவுற்றது.

- மதுரை வெண்புலி.

Comments