பள்ளி வளாகத்திற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு! கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை! !

   -MMH 

   வால்பாறை நகரின் மையப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று மாலையில் அரசு பள்ளி வளாகத்துக்குள் ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன.

அப்போது 3 மணியளவில் திடீரென்று வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியே வந்தது. பின்னர் அது, பள்ளி சுற்றுச் சுவரை தாண்டி வளாகத்துக்குள் குதித்தது. பிறகு அங்கு மேய்ந்து கொண்டு இருந்த ஒரு ஆட்டை கவ்வியது. 

இதை வகுப்பறையில் இருந்த மாணவர்கள் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அவர்கள் அனைவரும் பயத்தில் கூச்ச லிட்டனர். மாணவர்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டதால் அந்த சத்தத்தில் ஆட்டை கவ்விய சிறுத்தை, அதை அங்கேயே போட்டு விட்டு சுற்றுச்சுவர் மீது ஏறி தாவி மீண்டும் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது. 

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து பள்ளி வளாகம் மற்றும் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சிறுத்தையை தேடினார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை.

 இருந்தபோதிலும் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

"கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதேபோல் பள்ளி வளாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 2 சிறுத்தைகள் நடமாடின. அதை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுக்கப் பட்டது. இரண்டு சிறுத்தைப்புலிகள் நடமாடி வந்தது. இதை யடுத்து வனத்துறையினர் அங்கு உள்ள புதர்களை அகற்றியதால் சிறுத்தை நடமாடவில்லை.  

ஆனால் தற்போது வால்பாறை நகரில் கால்நடைகள் நடமாட் டம் அதிகரித்து விட்டது. இதனால் மீண்டும் சிறுத்தை ஊருக்குள் வந்து உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி கூண்டு வைத்து அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும்." இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-S.ராஜேந்திரன், திவ்யாகுமார் வால்பாறை.

Comments