தஞ்சையில் கூட்ட நெரிசல்! - போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு!!

  -MMH
   தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தஞ்சையில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி என்றாலே பட்டாசும் புத்தாடைகளும் தான். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் முக்கிய திருவிழாவான தீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தன்று   (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது . 

பண்டிகையை சிறப்பாக கொண்டாட தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து புத்தாடை, பட்டாசுகள், பலகாரங்கள் வாங்குவதற்காக தஞ்சையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தஞ்சை மாநகரில் நேற்றுகாலை முதலே மழை விட்டு விட்டு  பெய்து வந்தது. இருந்தாலும் மக்கள் குடைகளை பிடித்தபடி புத்தாடை வாங்குவதற்காக சென்றனர்.

இதனால் தஞ்சை கீழராஜவீதி, தெற்குவீதி, காந்திஜிசாலை, கீழவாசல் செல்லும் சாலையில் உள்ள துணிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடைவீதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள். தஞ்சை காந்திஜிசாலை, அண்ணாசாலை, தெற்குவீதியில்  வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. 
மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி காந்திஜிசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கு தேவையான அனைத்து வகை துணிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கடைகளின் காரணமாக போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதுமட்டுமல்லாது ஒலிபெருக்கி மூலம் மக்கள் எவ்வாறு கவனமுடனும் எச்சரிக்கையுடனும்   இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
சுகாதாரத் துறையினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கவனமுடன் தனிமனித இடைவெளியை பின்பற்றி முகக்  கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.  ஏற்கனவே சுகாதாரத்துறை கொரோனா  நோயின்  மூன்றாவது அலை   நவம்பர் மாதத்தில் பரவக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை  எளிமையாக கொண்டாட தமிழக அரசும் சுகாதாரத்துறை வரும் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் இவ்வாறு கூடுவது  அனைவரின் மனதிலும் அச்சத்தை விதைத்துள்ளது.  வருகின்ற தீபாவளியை அமைதியான முறையிலும் கவனமாகவும் கொண்டாடவேண்டும்.
  
நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments