சிங்கம்புணரி அருகே பம்புசெட் மோட்டர் அறை, கிணற்றுக்குள் சரிந்து விழுந்து பெண் பலி! 14 மணி நேரமாக தொடரும் மீட்புப் பணி!

   -MMH 

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் சித்தப்படியை சேர்ந்தவர் ராஜு. விறகு வெட்டும் கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி அஞ்சலை(40). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அஞ்சலை, சித்தபட்டி அருகே உள்ள செவல்பட்டியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் சோமன் என்பவர் வயலில் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல நேற்று அதிகாலை வீட்டிலிருந்து கிளம்பி வயலுக்கு வேலைக்காக வந்துள்ளார். வேலைக்கு சென்ற அஞ்சலை இரவு 8 மணி ஆகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு, வேலைக்கு சென்று திரும்பிய கணவர் ராஜு தனது குழந்தைகளிடம் அம்மா எங்கே கேட்டுள்ளார். அப்போது அவரது பிள்ளைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், அஞ்சலை பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பாதது தெரியவந்தது.

உடனடியாக சோமன் ஆசிரியரின் வயலுக்கு தனது மூத்த மகள் ரஞ்சிதாவுடன் வந்து பார்த்துள்ளார். அங்கு, மோட்டார் அறையின் சுவர் இடிந்து, 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் சரிந்து விழுந்து கிடந்திருக்கிறது. கிணற்றினருகே அஞ்சலை கொண்டுவந்த சாப்பாடுக் கூடை மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பு கிடந்ததைக் கண்டு பதறிப் போன ராஜு, தனது கிராமத்தினருக்கு தகவல் தெரிவிக்க, கிராமத்தினர் தரப்பில் எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் மற்றும் திருப்பத்தூர், சிங்கம்புணரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டத் துவங்கினர். நேற்று இரவிலிருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறையினர், கிணற்றுக்குள் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். தற்பொழுது பெய்த தொடர் மழையினால் கிணற்றுக்குள் தொடர்ந்து மண் சரிந்து வருவதாலும், இன்னும் கிணற்றில் அதிகமான தண்ணீர் இருப்பதனாலும், கிணற்றுக்குள் கிடக்கும் கட்டிட இடிபாடுகளுக்கிடையே கிடக்கும் அஞ்சலையை மீட்கும் பணி தாமதமாவதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி, உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் ஆகியோர் கூறினர். 

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சிங்கம்புணரி நிலைய அலுவலர் அருள்ராஜ், திருப்பத்தூர் நிலைய சிறப்பு அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன் மற்றும் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய காவலர்கள் தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவலறிந்து தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல் செல்வி, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கிராமத்தில், தனது கடும் உழைப்பால் அனைவரிடமும் நற்பெயர் பெற்றுள்ள அஞ்சலைக்கு நேர்ந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

- பாரூக், ராயல் ஹமீது.

Comments