சிங்கம்புணரி மின்வாரியத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் 2 பேருக்கு 4 ஆண்டு சிறை! சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

   -MMH 

     சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த மனோகரன் என்பவா் தனது வீட்டிற்கு மும்முனை மின் இணைப்புப் பெறுவதற்காக, கடந்த 2008ஆம் ஆண்டு சிங்கம்புணரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அவருக்கு சுமார் 6 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு, மீண்டும் மின் இணைப்பு வழங்கக் கோரியபோது, அப்போது மின் வாரிய அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வந்த பெரியசாமி என்பவர், மின் இணைப்பு வழங்குவதற்கு தனக்கு 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென்றும், அதே அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றிய சுப்பிரமணியன் தனக்கு 600 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த மனோகரன், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்புக் காவல்துறையிடம் புகாரளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தூவிய பணத்தை பெரியசாமி மற்றும் சுப்பிரமணியன்  ஆகிய இரண்டு அலுவலர்களிடமும் மனோகரன் வழங்கியபோது, மறைந்திருந்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பெரியசாமி மற்றும் சுப்பிரமணியன்  ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி உதயவேலவன் முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்  குற்றம் சாட்டப்பட்ட மனோகரன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உதயவேலவன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

- அப்துல்சலாம்.

Comments