கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி! சோதனை சாவடியில் வாகனங்கள் தீவிர பரிசோதனை!! கிருமி நாசினி தெளித்த பிறகே வாகனங்களுக்கு அனுமதி !!

   -MMH 

    கேரளாவில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாத்துக்கள் நோய் பாதிக்கப்பட்டு இறந்தன. இதன் காரணமாக தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கால்நடை பராமரிப்பு துறை மூலம் தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களுக்கு கிருமி நாசினி மற்றும் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் சுத்தம் செய்யாமல் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியிலேயே திருப்பி அனுப்பி வருகின்றனர். 

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட வாத்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் 4 பேர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி ஆகிய சோதனை சாவடியில் கறிக்கோழி வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்து சுத்தம் செய்யாமல் தமிழகத்திற்கு வரும் கறிக்கோழி வாகனங்களை திருப்பி அனுப்பப்படுகின்றன.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கோழி, முட்டை, வாத்து உள்ளிட்டவைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அங்கிருந்து திரும்பி வரும் போது வாகனத்தில் உள்ள கூண்டு உள்ளிட்டவைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தமிழகத்தையொட்டிய கேரளா பகுதிகளில் இந்த காய்ச்சல் பாதிப்பு- இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சோதனை சாவடிகளில் ஒரு டாக்டர், உதவியாளர், ஆய்வாளர் ஆகியோர் 2 குழுக்களாக சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சுரேஷ்குமார்

சி.ராஜேந்திரன்.

Comments