மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்..!! கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டவர் முதல்வர் உட்பட திமுகவினர் கண்ணீர் அஞ்சலி.!!!

   -MMH 

   மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உதவியாளர் சண்முகநாதன் நேற்று மாலை காலமானார். சுமார் 50 ஆண்டுக்காலம் கருணாநிதியின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துவிட்டார்.

சட்டமன்றம், முரசொலி அலுவலகம், அறிவாலயம், கோபாலபுர இல்லம், அரசியல் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என கருணாநிதி செல்லும் அத்தனை இடங்களுக்கும் உடன் செல்லும் ஒரே நபராக இருந்து, கருணாநிதியின் நிழலாகச் செயல்பட்டவர் கோ.சண்முகநாதன். ஆரம்பத்தில் காவல்துறையில் சுருக்கெழுத்துப் பணியாளராகப் பணியாற்றிய சண்முகநாதன், பல்வேறு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். கருணாநிதியின் அழைப்பின் பேரில், தமிழக சட்டமன்ற மேலவையில் சுருக்கெழுத்துப் பணியாளராகச் சேர்ந்தார். அதன் பின்னர், 1969-ம் ஆண்டு கருணாநிதியின் நேர்முக உதவியாளராகச் சேர்ந்துகொண்டார்.

ஒருமுறை சண்முகநாதனைப் பற்றிப் பேசிய கருணாநிதி, ``என்னைப் பொறுத்தவரையில் சண்முகநாதன், என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் என்பதைவிட, என் அகத்திலிருந்து பணியாற்றுபவர். சம்பளத்துக்காக வந்தவர் அல்ல. இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் அளவுக்கு என்னோடு கலந்துவிட்டவர்" என உருக்கமாகக் கூறியிருந்தார்.

சண்முகநாதனின் மரணம் தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், திமுக  M.P  டி ஆர் பாலு ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர், பல்வேறு அரசியல் தலைவர்களும் அவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

-சாதிக் அலி.

Comments