மாணவர்கள் சேர்க்கையிலும் கல்வி போதிப்பதிலும் சிறந்து விளங்கும் பள்ளி போதிய இட வசதியின்றி பரிதவிப்பு!

 -MMH 

பொள்ளாச்சி:மாணவர் சேர்க்கையில் மாவட்டத்தில் முதன்மை; கல்வி போதிப்பதில் தனியார் பள்ளிகளுக்கு நிகரானது, என, பல பெருமைகளை கொண்டது, பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி. ஆனால், போதிய வகுப்பறை, கழிப்பறை, சமையல் கூட வசதிகள் இல்லாமல், மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கும் அவலம் நீடிக்கிறது.

பொள்ளாச்சி ஊத்துக்காடு ரோடு, ராமகிருஷ்ணா நகரில், 1973ல் துவங்கப்பட்ட பள்ளி, 2005ல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எல்.கே.ஜி., முதல், எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது. கடந்தாண்டு வரை, 512 மாணவர்கள் படித்து வந்தனர். 'ஆன்லைன்' கல்வி, ஆசிரியர்கள் ஈடுபாடு காரணமாக, இந்தாண்டு சேர்க்கை அதிகரித்துள்ளது.புதியதாக சேர்க்கப்பட்ட, 450 பேரில், 400 மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து இங்கு சேர்ந்துள்ளனர். பள்ளியில் தற்போது, 962 மாணவர்கள் படிக்கின்றனர்.

மாவட்டத்திலேயே அதிக மாணவர் சேர்க்கை நடந்துள்ள பள்ளி, என பெருமை பெற்றுள்ளது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை வசதிகள், கழிப்பிடம் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி கற்பிப்பு, ஆங்கில வழி கல்வி போன்ற காரணங்களால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப கட்டட வசதி இல்லை.இதனால், நெருக்கடியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை சமாளிக்க, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒரு வகுப்பு மாணவர்கள் வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வரும் சூழல் உள்ளது. பள்ளியில் போதிய கழிப்பிட வசதியில்லாததால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர். பள்ளி சமையல் கூடம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. அந்த கட்டடத்தில் சமைக்க முடியாததால், வகுப்பறை அருகே உள்ள இடம், சமையலறையாக மாற்றப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:  ஆங்கில வழி கல்வி உள்ள அரசுப்பள்ளியாக உள்ளது. இப்பள்ளி தனியாருக்கு நிகராக இருந்தாலும், அதற்கேற்ப இடவசதி இல்லை. தரமான கல்வி கிடைப்பதால், மாணவர்கள் சேர்க்கை அதிகளவில் நடக்கிறது.ஆனால், பள்ளி வளர்ச்சிக்கு அதிகாரிகளின் கவனம் திரும்பவில்லை. பல முறை புகார் தெரிவித்தும், மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அதிருப்தியளிக்கிறது.பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தருவதுடன், ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

உதவுவாரா அமைச்சர்?முன்னாள் கவுன்சிலர் கவுதமன் கூறுகையில், 'இப்பள்ளியை கடந்த, 1973ல், தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷின் தாத்தா, தர்மலிங்கம் திறந்து வைத்தார். பள்ளி வளர்ச்சிக்கு முன்னாள் கவுன்சிலர் ரங்கநாதனும், நானும் இடம் பெற்று கொடுத்தோம். தற்போது, இப்பள்ளி வளர்ச்சி பெருமை அளிக்கிறது.அதே நேரத்தில், பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பிடம், சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் இல்லை. அதிகளவு மாணவர்களை கொண்ட பள்ளியில், வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பள்ளியில் வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். பள்ளி மேம்பாட்டுக்கு, அமைச்சர் உதவ வேண்டும்,' என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments