பாடத்திட்டத்தில் சிலம்பக்கலை! தமிழக மக்கள் மன்றம் நடத்திய சிலம்பப் போட்டியில் அமைச்சர் வீ.மெய்யநாதன் பேச்சு!

   -MMH 

   கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிலம்பக் கலை வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தும், தமிழர் திருநாளை முன்னிட்டும்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்,தமிழக மக்கள் மன்றம் சார்பில்,சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. கும்மங்குடி விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த

இப்போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தனர். 

இப்போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை போன்ற பல மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டமும், இரண்டாவது பரிசு சிவகங்கை மாவட்டமும், மூன்றாவது பரிசை திருச்சி மாவட்டமும் தட்டிச் சென்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் வீ.மெய்யநாதன் பேசுகையில், 'மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிலம்பக்கலை பயின்ற வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  மூன்று சதவீத ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதோடு மட்டுமன்றி, சிலம்பக் கலையை பள்ளிப் பாடத்திட்டங்களில் கொண்டு வரவும் ஆணையிட்டுள்ளார்' என்பதனை வீரர், வீராங்கனைகளுக்கு தெரிவித்தார். மேலும் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசுகையில், 'பெற்றோர்கள் குழந்தைகளிடம் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தாது, கல்வியோடு சேர்ந்த கலைகளிலும், விளையாட்டுகளிலும் கவனம் செலுத்துவதன் மூலம் பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றோடு சேர்ந்தே வளர்வார்கள்' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரர்கள் அனைவரும் அமைச்சர்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் அவர்களுக்கு தங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தங்களின் சிலம்பக் கலை நிகழ்ச்சிகள் மூலமாக வெளிப்படுத்தினர்.

தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார் தலைமையில் நடந்த இவ்விழாவில் திருப்பத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனும் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். சிவகங்கை கல்வி மாவட்டத்தைச் சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்களும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிலம்ப ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு உடற்கல்வி பல்கழைக்கழக துணைவேந்தர் சுந்தர், திருப்பத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் சண்முக வடிவேல், கல்லல் ஒன்றியப் பெருந்தலைவர் சொர்ணம் அசோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சிலம்ப ஆசிரியர் ஆகாஷ் நன்றி கூறினார்.

- பாரூக், சிவகங்கை.

Comments