தொழில் அதிபர் வீட்டில் திருடிய சாமியார்! காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை!!

      -MMH 

கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 39) தொழில் அதிபர். இவர் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். இதனால் அவருக்கு, அங்கிருந்த சாமியார் ராஜேந்திரன் என்ற அன்பே சிவம் (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சாமியார் ராஜேந்திரன் மூலிகை எண்ணெய் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி உள்ளார். அதை கவுதம் வாங்கி வந்து உறவினர்கள் சிலருக்கு கொடுத்து உள்ளார். 

இதையடுத்து கவுதம், சாமியார் ராஜேந்தி ரனை கோவையில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அதோடு, மூலிகை எண்ணெய் தயாரித்து கோவையில் விற்பனை செய்யலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சாமியார் ராஜேந்திரன் கோவை வந்து கவுதம் வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கியிருந்தார். அப்போது அவர்கள் மூலிகை எண்ணெய் தயாரித்து உள்ளனர். அதை சிலருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவுதம் வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் பணம் எடுத்து வந்து வீட்டின் மேஜையில் வைத்திருந்தார்.

மறுநாள் காலையில் பார்த்த போது ரூ.3 லட்சத்தை காணவில்லை. மேலும் வீட்டில் தங்கி இருந்த சாமியார் ராஜேந்திரனையும் காண வில்லை. ஆனால் ராஜேந்திரனின் திருவோடு மற்றும் துணிப்பை மட்டும் இருந்துள்ளது. இது குறித்து கவுதம் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது வீட்டில் இருந்த பணம் ரூ.3 லட்சத்தை சாமியார் ராஜேந்திரன் திருடி விட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments