திருச்செந்தூர் ரயில் பாலக்காடு வரை நீட்டிப்பு! கோவை மீண்டும் புறக்கணிப்பு! ! எதிர்பார்ப்பில் இருந்த பொதுமக்கள் ஏமாற்றம்!!!

   -MMH 

    திருச்செந்துார் - பொள்ளாச்சி இடையே இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ரயில், கோவை வரை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, பாலக்காடுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழநி வழித்தடத்தில், நாகர்கோவில், திருச்செந்துார் மற்றும் ராமேஸ்வரத்துக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 10 ஆண்டுகளுக்கு முன், அகல ரயில் பாதைப் பணிக்காக இவை நிறுத்தப்பட்டன. அந்தப் பணிகள் முடிந்து, கோவை - பொள்ளாச்சி இடையிலான ரயில் பாதை மின் மயமாக்கும் பணியும் முடிந்து விட்டது.

ஆனால், பழைய ரயில்கள் பெரும்பாலும் மீண்டும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் பாலக்காட்டிலிருந்து திருச்செந்துாருக்கு இயக்கப்பட்டு வந்த ரயில், பொள்ளாச்சியிலிருந்து பயணிகள் ரயிலாக இயக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது.

அதை கோவை அல்லது மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டுமென்று, கோவையிலுள்ள பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை குறித்து எந்த பதிலும் தராத தெற்கு ரயில்வே, பொள்ளாச்சி - திருச்செந்துார் ரயில் தள்ளி வைக்கப்படுவதாக, கடந்த 13ம் தேதி அறிவித்தது.

இதனால் அந்த ரயில், கோவையில் இருந்து இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதற்கு மாறாக, நேற்று தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், இந்த ரயில் 2021 டிச.,16 முதல் பாலக்காட்டில் இருந்து திருச்செந்துாருக்கு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயிலாக, 10 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

காலை 4:55 மணிக்கு பாலக்காடு சந்திப்பில் புறப்படும் இந்த ரயில், காலை 6:30 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 6:40க்கு புறப்பட்டு, மாலை 3:45 மணிக்கு திருச்செந்துார் செல்லுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ஏமாற்றம்கோவையிலுள்ள பல லட்சம் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.

இந்த ரயிலை, காலை 6:00 மணிக்கு கோவையிலிருந்து அல்லது காலை 5:00 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் வகையில் இயக்கினால், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவர். ரயில்வேக்கு பெரும் வருவாய் கிடைக்கும்.

திருச்செந்துார் ரயில் மட்டுமின்றி, கோவை - பொள்ளாச்சி இடையிலான பாசஞ்சர் ரயில், கோவை - மதுரை பகல் மற்றும் இரவு நேர ரயில், கோவை - நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கினால், பொள்ளாச்சி மற்றும் தென் மாவட்டங்களுக்கு கோவையிலிருந்து பஸ்சில்தான் செல்ல வேண்டுமென்ற கட்டாயம் தவிர்க்கப்படும்; போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் குறையும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-கோவை மாவட்ட நிருபர் குழு.

Comments