சிங்கம்புணரியில் வீடு புகுந்து திருடிய வாலிபர், கோவையில் கைது!

   -MMH 

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகள் மாரியம்மாள்(வயது 44). இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது தூரத்து உறவினர் விருதுநகர் சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஜம்புகேஸ்வரன் (26).

இவர் ஆசிரியை மாரியம்மாள் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் வேலைக்குச் சென்று விட்டார். 

மாரியம்மாள் வேலைக்குச் சென்ற நேரத்தை பயன்படுத்தி வீட்டிற்கு வந்த ஜம்புகேஸ்வரன், வீட்டுச் சாவியை எடுத்து, வீட்டைத் திறந்து பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய மாரியம்மாள், கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 22 கிராம் தங்க நகைகள், 15ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடப்பட்டிருந்தது. இது குறித்து மாரியம்மாள், தனது உறவினர் ஜம்புகேஸ்வரன் சந்தேகமுள்ளதாகக் கொடுத்த புகாரின் பேரில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பின்னர், இது தொடர்பாக சிங்கம்புணரி சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர், கோவையில் பதுங்கி இருந்த ஜம்புகேஸ்வரனை  கைது செய்தனர்.

அவர் சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு, திருப்பத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

- பாரூக், அப்துல்சலாம்.

Comments