சிங்கம்புணரி அருகே கழுத்தளவு ஓடும் நீரில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்!

   -MMH 

  சிங்கம்புணரி அருகே மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது கண்டுப்பட்டி கிராமம். இந்தக் கிராமம் வஞ்சிநகரம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்டது. இங்கு வசித்துவந்த செல்லம்(65) என்ற முதியவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார்.

இந்தக் கிராமத்திற்கு அருகிலுள்ள இரண்டு பெரிய கண்மாய்களும் ஏற்கனவே நிரம்பி வெளியேறும் மறுகால் உபரிநீரால் இந்தக் கிராமம் முழுக்க நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும், மயானத்திற்கு செல்லும் வழியில் கழுத்தளவு மழைநீர் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், செல்லத்தின் சடலத்தை சுமந்து செல்ல வாய்ப்பில்லாத நிலையில், வஞ்சி நகரம் ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் நேரில் வந்து கிராமத்தின் நிலையை பார்த்துவிட்டு எந்த ஒரு உதவியும் செய்யாமல் சென்றிருக்கிறார்.

ஊடகவியலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்று மதியம் 2 மணி அளவில் அங்கு சென்று அங்கிருந்து கருங்காலக்குடி வருவாய் ஆய்வாளரை தொடர்பு கொண்டனர். உடனடியாக கிராமத்திற்கு வந்த கருங்காலக்குடி வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் வஞ்சி நகரம் கிராம நிர்வாக அலுவலர் கல்யாணிமுத்து ஆகியோர் பல்வேறு அரசு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவி கோரினர்.

ஊராட்சித் தலைவரும் மற்ற அரசு அதிகாரிகளும் கைவிட்ட நிலையில், வேறுவழியின்றி செல்லத்தின் சடலத்தை சாலையில் வைத்து சடங்குகள் செய்த பின்னர், அவரது உறவினர்கள் கழுத்தளவு நீரில் மூழ்கியபடியே சுமந்து சென்று இறுதிச் சடங்கு செய்து புதைத்தனர்.

அந்தப் பகுதியில் பெருமழை பெய்யும் போதெல்லாம் விவசாய வேலைகளுக்கு செல்வதற்குக் கூட ஆடைகளைக் களைந்து, தண்ணீரில் மூழ்கிச் செல்ல வேண்டிய அவல நிலையில் இருப்பதாக செல்வி என்ற பெண் ஊடகவியலாளர்களிடம் கண்கள் கலங்கிய நிலையில் சொன்னார்.

இந்நிலையைச் சரி செய்ய மயானத்திற்கும், விவசாய நிலங்களுக்கும் செல்வதற்கு ஒரு பாலம் அமைத்து தருமாறு அந்த கிராம பொது மக்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பாரூக், மதுரை வெண்புலி.

Comments