கோவையில் இருந்து ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் - ஒரு விசிட்..!!

 

-MMH

     அருள் மிகு மாசாணி அம்மன் கோவை மாவட்டம்  பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலையில் இந்த மாசாணி அம்மன் கோவில் இருக்கிறது.நேற்று இந்த கோவிலுக்கு அம்மனை தரிசிக்க சென்ரோம். கோவையில் இருந்து பொள்ளாச்சி பின்னர் ஆனைமலை.இவ்வூர் செல்லும் வழி எங்கும் பசுமை..பசுமை..பசுமை..பசுமை தவிர வேறு எதுவும் இல்லை.இரண்டு பக்கமும் நிறைய புளிய மரங்கள் ரொம்ப அடர்த்தியாய்..இரு மருங்கிலும் நிறைய தென்னை மரங்கள்.வயல் வெளிகள் என எங்கும் பசுமை.

கோவிலை அடைந்தோம்.அம்மன் கோவில் என்பதினாலோ ஏகப்பட்ட அம்மணிகள் கூட்டம்.(இதெல்லாம் இப்போ ரொம்ப முக்கியமா..?).கோவிலின் பெரிய ஆர்ச் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவில் செல்லும் வழி மெயின் ரோட்டில் இருந்தே கடைகளுடன் தொடங்குகிறது. இரண்டு பக்கமும் கடைகள் ....அம்மன் படங்கள், குங்குமம், மஞ்சள், மலர் மாலை, பொரி கடலை, கம்பங் கூழ், ஜூஸ் கடை என நிறைய.

தென்னை மரங்கள் நிறைந்த தோப்பில் காரினை நிறுத்தி விட்டு (காட்டுக்குள்ள வண்டி நிறுத்த 30 ரூபாய் ) வந்தோம்.கோவிலின் கீழ் பகுதியில் ஒரு கிளை ஆறு...ஆழியாற்றிலிருந்து பிரிந்து வரும் உப்பாறு,இந்த ஆற்றில் இறங்கி கை கால் கழுவி கொண்டு மேலேறினோம். இந்த ஆற்றில் நீராடினால் நம் பாவங்கள் நீரில் விழுந்த உப்பாய் கரைந்து போகுமாம். இந்த கரை ஓரமாய் ஒரு விநாயகர் வீற்று இருக்கிறார்.உள்ளே வன்னி மரம், நாகலிங்க மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தெய்வங்கள் வீற்று இருக்கின்றன.குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் குடும்பத்துடன் வந்து தொட்டில் கட்டி கொண்டு இருந்தனர். நாமும் உள்ளே சென்று ஒரு கும்பிடு போட்டு விட்டு அம்மனை தரிசிக்க ஆலயம் நுழைந்தோம்.

பெரிய மண்டபம்,உள்ளே பக்தர்கள் செல்ல நீண்ட வரிசை.வி ஐ பி களுக்கு என்று தனி வரிசை இருக்கிறது.நாம அப்படி ஒண்ணும் பெரிய அபாடக்கர் இல்லையே ..ஹி ஹி ஹி... வளைந்து வளைந்து செல்லும் வரிசையில் (ஒரு பத்து அடிதான் இருக்கும்.இருந்தாலும் வளைந்து நீண்டு செல்வதால் ரொம்ப தூரம் செல்வது போல் உணர்வு) நாமும் ஐக்கியமானோம். அம்மன் வேறெங்கும் காண முடியாத நிலையில் மயான தேவதையாக படுத்து இருக்கிறாள். மஞ்சள் சிகப்பு புடவையில் மிகவும் அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள்.மிகவும் நிதானமாய் அம்மனை தரிசித்து விட்டு குங்குமம் திருநீறு வாங்கிகொண்டு அம்மனை நினைத்த படி வெளி பிரகாரம் வந்தோம்.மேலும் உள்ளே உள்ள தெய்வங்களை வணங்கி விட்டு பிரகாரத்தில் அமர்ந்தோம்.

உட்கார்ந்த இடம் எதிரே பிரசாத கடை.சர்க்கரை பொங்கலும் புளியோதரையும் வாங்கி அமர்ந்தோம்.(சிறிய தொன்னை..அளவும் ரொம்ப குறைவு ஆனால் விலையோ பத்து ரூபாய்). அப்புறம் நீதிக்கல் என்கிற தெய்வம் இருக்கிறது.பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களை தண்டிக்க இங்குள்ள ஆட்டு உரலில் மிளகாய் அரைத்து நீதிக்கல்லில் பூசி அம்மனிடம் வேண்டுதல் செய்தால் அம்மன் அவர்களை தண்டிப்பாள் என்பது நிச்சயமான உண்மை.

பெண்களின் உடல், மனம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் அம்மன் நிறைவேற்றுவாள் என்பது அசைக்க முடியாத உண்மை. இங்கு செவ்வாய், வெள்ளி, மாத அமாவாசை, மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கண்டிப்பாய் அனைத்து பெண்களும் செல்ல வேண்டிய கோவில்.வணங்க வேண்டிய தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு மாசாணி அம்மன்.  ஓம் சக்தி.....மாசாணி தாயே..!!

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன். பொள்ளாச்சி.

Comments