துடியலூர் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது!!

   -MMH 

   துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் பிரிவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 வாலிபர்கள் வந்தனர். பின்னர் எந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயன்றனர். இதற்கிடையில் மும்பையில் உள்ள வங்கி அலுவலகத்தில் அலாரம் ஒலித்தது. உடனே வங்கி அதிகாரிகள், துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர்.

ஆனால் அங்கு யாரும் இல்லை. பின்னர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 2 வாலிபர்களின் உருவங்களும் பதிவாகி இருந்தது. அவர்களை போலீசார் தேடினர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்கு அருகிலேயே சற்று தொலைவில் நின்றிருந்த அவர்களை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சந்திரசேகர்(வயது 24), பிருந்தாவன் பாகரதி(26) என்பதும், நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதும், குடிபோதையில் ஏ.டி.ம். எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments