கோவை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் பழுதடைந்த வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்!

   -MMH 

   கோவையில் வீட்டுவசதி வாரியம் சார்பில் 1965-66-ம் ஆண்டுகளில் உக்கடம் பகுதியில் 292 வீடுகளும், பேரூர் தெற்கு பகுதியில் 350 வீடுகளும், வடக்கு பகுதியில் 782 வீடுகளும் என 1,424 வீடுகள் கட்டப்பட்டு குடிசை மாற்று வாரிய கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் அனைத்தும் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தப்பட்டது. 

ஆனால் குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்யாமல் காலதாமதம் செய்து வருகின்றனர். எனவே குடிசை மாற்று வாரியம் சார்பில் குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி அந்த பகுதியில் பேனரும் வைக்கப்பட்டு உள்ளது. இதுவரை கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில் நேற்று குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பேரூர் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- குடியிருப்புவாசிகளில் 90 சதவீதம் பேர் வீடுகளை காலி செய்ய உறுதி அளித்து உள்ளனர். 

வீடுகளை காலி செய்து கொடுத்தால், விரைவில் கூடுதல் வசதிகளுடன் புது வீடு இதே பகுதியில் கட்டி தரப்படும். மேலும் அதுவரை வெளியிடங்களில் வாடகைக்கு தங்க 1½ ஆண்டுகளுக்கு ரூ.24 ஆயிரம் 2 தவணையாக வழங்கப்படும். தரைத்தளத்தில் இருந்தவர்களுக்கு தரைத்தளத்திலும், மாடிகளில் இருந்தவர்களுக்கு மாடியிலும் வீடுகள் ஒதுக்கப்படும். கட்டுமான பணி நடக்கும்போது குடியிருப்புவாசிகள் நேரில் வந்து பார்வையிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments