சிங்கம்புணரி பாலாற்றில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு!

   -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஓடும் பாலாற்றில் 16 ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழையில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிங்கம்புணரி பாலாற்றில் கடந்த 16 வருடங்களுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு, இந்த ஆண்டுதான், சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதியில் வடகிழக்கு பருவமழை 14செ.மீட்டர் அளவுக்கு பெய்தது. இதன் காரணமாக 16 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு 25.11.2021ல் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி இரண்டாவது முறையாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

அதனை அடுத்து வடகிழக்கு பருவமழை தடைப்பட்டு பனிப்பொழிவு அதிகரித்தது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக சிங்கம்புணரி பகுதியில் மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைப்பொழிவாக 31ஆம்தேதி காலை 6 மணி நிலவரப்படி 25 மில்லி மீட்டரும், ஜனவரி 1ஆம் தேதி காலை 6 மணி நிலவரப்படி 10.20 மில்லி மீட்டரும், இன்று காலை 6 மணி நிலவரப்படி 101.60 மில்லி மீட்டரும் மழை பெய்தது. அதன் காரணமாக புத்தாண்டு பிறந்த 2 வது நாளில் இன்று பகலில் பாலாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த வடகிழக்கு பருவமழையில் மூன்று முறையாக பாலாற்றில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், கனமழை காரணமாக பல நூறு ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த  நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மீண்டும் மழை தொடரும் பட்சத்தில் பயிர் சேதம் கடுமையாக இருக்கும் என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

- அப்துல்சலாம்.

Comments