சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது!

   -MMH 

   பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார், சென்னை உயர்நீதி மன்றத்தில், 'பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்ட் அருகில், பல்லடம் ரோடு மற்றும் பாலக்காடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சிக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்,' என மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எட்டு வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டது. அதன்படி பொள்ளாச்சி பகுதிகளில், ஆட்டோவில் ஒலி பெருக்கி வாயிலாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. 

இந்நிலையில், நேற்று முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை கண்காணிப்பு செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:"கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. மீன்கரை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. இந்த ரோட்டில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசத்துக்குள் ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால், துறை சார்பில் அகற்றப்படும். நோட்டீஸ் பெற்ற சிலர், தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். நேற்று ஒரு நாளில், மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பாலத்தில் இருந்து மார்க்கெட் ரோடு வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இன்று, மார்க்கெட் ரோட்டில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும்.பல்லடம் ரோடு, பாலக்காடு ரோடு, வால்பாறை ரோட்டில் தங்கம் தியேட்டர் வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்." இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments