பழுதடைந்ததால் பணிமனை நோக்கி இயக்கப்பட்ட அரசு பஸ்சின் சக்கரம் கழன்று ஓடியது! கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பரபரப்பு!!

 

-MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலையில் அரசு பஸ் ஒன்று, பயணிகளுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி பகுதிக்கு இயக்கப்பட்டது.பின்னர் அங்கிருந்து பொள்ளாச்சி பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டது. ஆனால் திடீரென பஸ்சில் பழுது ஏற்பட்டது. இதனால் பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் வேறு வாடகை வாகனங்களில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். 

இதையடுத்து அரசு பஸ் அங்கிருந்து பணிமனை நோக்கி இயக்கப்பட்டது. பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் மட்டுமே இருந்தனர். கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் நான்கு வழிச்சாலையில் சென்றபோது திடீரென முன்பக்க இடதுபுற சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று ஒடியது.  இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். 

அதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே பயணிகள் இறக்கிவிடப்பட்டதாலும், டிரைவரின் சாமர்த்தியத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த பணிமனை ஊழியர்கள், பஸ் சக்கரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது;-

கோவை-பொள்ளாச்சி இடையே கிராமங்கள் வழியாக இயக்கப்படும் அரசு பஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைகின்றனர்.  அந்த பஸ்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், நல்ல நிலையில் பராமரித்து இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments