இரு பெண் காவல் ஆய்வாளர்களின் சம்பளத்தைத் திரும்பப் பெறுக! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    -MMH 

    சென்னையை அடுத்த நெற்குன்றத்தைச் சேர்ந்த பரிமளா என்பவர் தனது கணவர் தீஜே தயாள், மாமியார் கீதா, மைத்துனி சபீதா, மைத்துனியின் கணவர் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிராக குடும்ப வன்முறை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில், நான்கு பேருக்கு எதிராக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு, 2016ஆம் ஆண்டு எழும்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால், சபீதா மற்றும் ஸ்ரீநாத் மீதான வழக்கைத் தனியாக பிரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களைக் கைது செய்து ஆஜர்படுத்தும் வகையில், இருவருக்கு எதிராகவும் பிடிவாரண்ட் பிறப்பித்து 2020ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த பிடிவாரண்ட் உத்தரவை காவல் துறையினர் இதுவரை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அதை செயல்படுத்த உத்தரவிடக்கோரி பரிமளா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் நேற்று (டிச.31) விசாரணைக்கு வந்த போது, வழக்கை ரத்து செய்யக் கோரி சபீதாவும், ஸ்ரீநாத்தும் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிட மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 2020ஆம் ஆண்டு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர்களாக இருந்த தனலட்சுமி மற்றும் செல்வி ஆகிய இருவரும், பிடிவாரண்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அரசு நிதியை ஊதியமாக பெற்ற இருவரும் தங்கள் கடமையைச் செய்யாததால், குறிப்பிட்ட காலத்தில் அவர்களுக்கு வழங்கிய ஊதியத்தை திரும்ப வசூலிக்கும்படியும், இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

- பாரூக், அப்துல்சலாம்.

Comments