குறுக்கு வழியில் சம்பாதிக்க விஷ ஊசி போட்டு கொன்று கொள்ளையடித்த தம்பதி கைது! காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!

 

-MMH

கோவை வாடகை கார் டிரைவர் கொலையில் கைதான தம்பதி ஏற்கனவே 4 பேரை விஷ ஊசி போட்டு கொன்றதும், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க இந்த வழியை அவர்கள் தேர்ந்து எடுத்தனர் என்றும் திடுக்கிடும் தகவல் வெளியானது.

கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் சானு (வயது30). வாடகை கார் டிரைவரான இவர், கடந்த 9-ந்தேதி வடவள்ளி அருகே ஓணாம்பாளையம் பங்களா கிளப் பகுதியில் சாலையோரத்தில் காருக்கு பிணமாக கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்த வடவள்ளி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் விஷ ஊசி போட்டும், தடியால் அடித்தும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி இருந்த காஞ்சிபுரம், மானாம்பதியை சேர்ந்த ஸ்டீபன் (40), அவருடைய 2-வது மனைவி அமலோற்பவம் (40) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணத்திற்கு ஆசைப்பட்டு, கார் டிரைவர் சானுவை கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் தனிப்படை போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்களை 2 பேரும் தெரிவித்தனர். 

துகுறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான ஸ்டீபன், எம்.காம் பட்டதாரி, பட்டப்படிப்பை முடித்து விட்டு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதுதவிர ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.

திருமணம் முடிந்து முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ஸ்டீபன், தனது குழந்தையை கவனித்து கொள்ளும் வேலைக்காக ஒரு பெண்ணை தேடி வந்தார். அப்போது இவரது வீட்டிற்கு அதே பகுதியை சேர்ந்த அமலோற்பவம், குழந்தையை பார்த்துக்கொள்ளும் வேலைக்காக வந்தார்.

அமலோற்பவத்துக்கு  பல் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் இருந்ததால் அவரை ஸ்டீபன் வேலைக்கு சேர்த்துக்கொண்டார். அமலோற்பவத்துக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் வேலைக்கு வந்த இடத்தில் ஸ்டீபனுடன் அவர் நெருங்கி பழகினார். இந்த நெருக்கம் காரணமாக அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

மனைவியின் கள்ளக்காதலை அறிந்த அமலோற்பவத்தின் கணவர், மனைவியை கண்டித்தார். ஸ்டீபனுடனான உறவை துண்டிக்குமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், தங்களது உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த அவரை கொல்ல முடிவு செய்தனர். அப்போது ஸ்டீபன், நான் ஏற்கனவே 2 பேரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். 

அதுபோன்று உன் கணவரையும் கொன்று விட்டு நாம் சந்தோஷமாக வாழலாம் என அமலோற்பவத்துக்கு தூபம் போட்டார். மகுடிக்கு மயங்கிய பாம்பாக, கள்ளக்காதலனின் பேச்சை கேட்ட அமலோற்பவமும் தனது கணவரை விஷ ஊசி செலுத்தி கொன்றார்.

இந்த கொலையை மறைத்து, 2 பேரும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். தான் பார்க்கும் வேலையில் கிடைக்கும் சம்பளம் தனது சொகுசு வாழக்கைக்கு போதாது என்று கருதிய ஸ்டீபன், குறுக்கு வழியில் நிறைய பணம் சம்பாதிக்க பல திட்டங்களை தீட்டினார்.  பணப்புழக்கம் அதிகம் உள்ளவர்களை குறிவைத்து, கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து ஜாலியாக வாழ ஆசைப்பட்டார். 

கணவரின் முடிவுக்கு அமலோற்பமும் சம்மதித்தார். 2 பேரும் சேர்ந்து தொழில் நிறுவனத்துக்கு ஆலோசனை கூறும் நிறுவனம் ஒன்றை தொடங்கி, பணப்புழக்கம் உடையவர்களை தொடர்பு கொண்டு தொழில் விஷயம் குறித்து பேச வேண்டும் என்றும், வரும் போது பணத்தை எடுத்து கொண்டு வருமாறும் கூறுவார்கள். அவர்களது பேச்சை நம்பி வருபவர்களை விஷ ஊசியை போட்டு கொன்று பணத்தை எடுத்து சென்றுள்ளனர். 

இவர்கள் மீது சென்னை ஆயிரம்விளக்கு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளது. 2015-ம் ஆண்டு இதுபோன்று ஒருவரை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக 2 பேரையும் சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 இந்த நிலையில் ஸ்டீபன் தனியாக 2 கொலைகளையும், அமலோற்பவத்துடன் சேர்ந்து 2 பேரையும் கொலை செய்துள்ளார்.தற்போது கோவையில் வாடகை கார் டிரைவர் சானு கொலையில் இருவரும் சிக்கியுள்ளனர். 

சென்னையில் செய்த கொலை வழக்குகளில் கைதான இருவரும் நிபந்தனை ஜாமீனில் வந்த பின்னர் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் மீது கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதயடுத்து அவர்களை சென்னை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன் பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கினர். கையில் இருந்த பணத்தை வைத்து 4 மாதங்களை கடத்தினர். அதன்பின்னர் வாடகை கொடுக்கவும், செலவுக்கு பணம் இல்லாமல் இருந்தனர்.

அப்போது தான் வாடகை கார் டிரைவர்கள் வாரத்தில் வரக் கூடிய பணத்தை சேமித்து வைத்து வாரத்தின் இறுதியில் தங்களது நிறுவனதுக்கு செலுத்துவதை ஏற்கனவே பழக்கமான டிரைவர் சானு மூலம் அறிந்தனர். அவர்களை குறி வைத்தால் நமக்கு தேவையான பணம் கிடைக்கும் என்று நினைத்தனர். இதில் முதலாவதாக சானுவை குறி வைத்தனர்.

அதன்படி ஸ்டீபன் சம்பவத்தன்று டிரைவர் சானுவுக்கு போன் செய்து விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என கூறி கோவை ஓணாம்பாளையம் பங்களா கிளப் முகவரியை கொடுத்தார். சானுவும் கால்டேக்சியுடன் அங்கு சென்றார். அங்கு ஸ்டீபனும், அமலோற்பவமும் காரில் ஏறினர். கார் விமான நிலையத்தை நோக்கி சென்றது. சிறிது தூரம் சென்ற நிலையில் பின்னால் அமர்ந்திருந்த ஸ்டீபனும், அவரது மனைவியும் விஷ ஊசியை சானுவின் உடம்பில் செலுத்தினர். இதில் அவர் மயக்கம் வருவதாக கூறவும், தாங்கள் தயாராக வைத்திருந்த கட்டையை எடுத்து தாக்கினர். 

இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் அவரை இருக்கையில் வைத்து விட்டு, காரை மீண்டும் ஒணாம்பாளையம் பங்களா கிளப் பகுதிக்கு கொண்டு வந்து விட்டுவிட்டு சானுவிடம் இருந்த செல்போன், ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த  நிலையில், கொலைகார தம்பதியிடம் இருந்து 20 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, ஒரு டேப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசில் சிக்காமல் இருப்பதற்காக 2 பேரும் ஏராளமான செல்போன் மற்றும் சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. செல்போன்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments