நட்புக்கு ஆண் - பெண் பேதம் தெரியாது! தோழனை தோளில் சுமக்கும் தோழிகள்! வைரலாகும் காணொலி!

 

-MMH

   இரண்டு நாட்களாக சமூக ஊடகத்தில் ஒரு காணொலி வைரலாகி வருகிறது. இரண்டு கால்களையும் இழந்த ஒரு மாற்றுத்திறனாளி வாலிபரை, இரண்டு இளம் பெண்கள் தங்களின் தோளில் சுமந்து தூக்கிச் செல்லும் காட்சி அதில் பதிவாகிருந்தது. இந்தக் காணொளியைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளம் பெண்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தக் காணொளியில் உள்ள மூன்று பேரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கொல்லத்தில் உள்ள சாஸ்தாம்கோட்டை DB கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படிக்கும், பிறக்கும் போதே கால் இன்றி பிறந்த ஆலிஃப் முகமது என்பவர்தான் அந்த வாலிபர். மேலும் அதே கல்லூரியில் படிக்கும் அவரது தோழிகள் ஆர்யா, அர்ச்சனா ஆகியோர்தான் அவரைத் தூக்கிச் செல்கின்றனர். இந்த நிகழ்வுதான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த வைரல் வீடியோ குறித்து பேசிய ஆலிஃப் முகமது, "எனக்கு பிறந்ததில் இருந்தே இரண்டு கால்களும் இல்லை. நான் எங்கேயாச்சும் போகணும்னு சொன்னா, உடனே என் கல்லூரியில் இருப்பவர்கள் என்னை தூக்கிக் கொண்டு செல்வார்கள்.

இதில் ஆண், பெண் பேதம் இல்லாம என்னை அனைவருமே தூக்கிச் செல்வார்கள். அப்படித்தான் எனது தோழிகளான ஆர்யா, அர்ச்சனா இருவரும் தூக்கிச் சென்றனர். அந்தக் காணொலிதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைநான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. இந்தக் காணொலி வைரலானதால் எங்க எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் நான் ஒரு முன்மாதிரியாக இருக்க ஆசைப்படுகிறேன். யாரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

இன்றைய இந்தியாவில் உன்னதமான செய்தியைச் சொல்லும் இந்தக் காணொலி, கல்லூரி இளைஞர் விழா கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது. அரிதினும் அரிதான இந்தக் காணொலியை எடுத்த ஜெகத் துளசிதரன், 'அது அற்புதமான தருணம்' என்கிறார். சாதி,மத பேதங்கள் அழியட்டும். புதிய பண்பாட்டுப் புரட்சி இது போல  பரவட்டும்!

- பாரூக்.

Comments