கோவையில் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!!

    -MMH 

   கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுட்டெரித்த வெயிலினால் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் வேகமாக குறைய தொடங்கியது. 

மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கோவையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவையில்  திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் பெரிய மழையாக உருவெடுத்தது. இந்த மழையினால் காந்திபுரம், நஞப்பா ரோடு, ராமநாதபுரம், லங்கா கார்னர் உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் மழைநீர் தேங்கியது. 

மேலும் கவுண்டம்பாளையம், வடவள்ளி, உக்கடம் உள்பட பல்வேறு இடங்களில் இந்த கோடை மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையினால் கோவை மாநகரில் குளிர்ந்த காலநிலை நிலவியது.

தமிழ்ப்புத்தாண்டை யொட்டி ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்க மார்க்கெட்டில் குவிந்தனர். அப்போது மழை பெய்ததால் அவர்கள் நனைந்தபடி தங்கள் வீடுகளுக்கு சென்றனர். இந்த மழை காரணமாக கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கோடை மழை குறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் ராமநாதன் கூறியதாவது:-

"கோவை மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் கோடை மழை பெய்கிறது. கோவையில் இந்த ஆண்டு 110 மி.மீ. வரை கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எதிர்பாரத வகையில் 287 மி.மீ. வரை கோடை மழை பெய்தது. மேலும் கோவையில் 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் கோவையில் வெப்பம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவும்." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments