பொள்ளாச்சியை நினைத்து திமுக தலைமைக்கு தலைவலியா..?

    -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு பதவிக்கு 23 பேர் போட்டியிடுவ்து திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் எங்குமே இல்லாத வகையில் பொள்ளாச்சியில் மட்டும் திமுக் உட்கட்சித் தேர்தல் களம் சற்று விறுவிறுப்பாக காணப்படுகிறது.

கோஷ்டிப்பூசலை கண்டு பொள்ளாச்சி நகரக் கழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திகைத்து நின்றதோடு இது தொடர்பாக திமுக தலைமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர், என முக்கியப் பதவியிடங்களுக்கு இப்போது தேர்தல் நடத்தப்படுவதால் அது தொடர்பான பஞ்சாயத்துக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. 

அந்த வகையில் கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரச் செயலாளர் பதவியிடத்துக்கான தேர்தல் தான் இப்போது திமுக மேல்மட்ட நிர்வாகிகள் மத்தியில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஒரு பதவிக்கு 23 பேர் போட்டியிடுவது தமிழகத்தில் எந்த ஊரிலும் நடக்காத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை நடைபெற்ற பொள்ளாச்சி திமுக நகரச் செயலாளர் பதவியிடத்துக்கான தேர்தலில் வெறும் 2 பேர் மட்டுமே போட்டியிட்டனர். தென்றல் செல்வராஜ், தமிழ்மணி ஆகிய இருவர் மட்டுமே போட்டியிட்ட நிலையில் இந்த முறை 23 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் திகைப்புக்கு ஆளான கோவை தெற்கு மாவட்டத்திற்கான திமுக தேர்தல் பொறுப்பாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. இது கட்சிக்கு ஆரோக்கியமான விஷயம் அல்ல என பொள்ளாச்சி நிர்வாகிகளுக்கு அட்வைஸ் தந்திருக்கிறார்.

பொள்ளாச்சியில் திமுகவினர் 23 கோஷ்டிகளாக உள்ளதை தான் இது போன்ற நிகழ்வு காட்டுவதாக சற்றே கடிந்தும் கொண்டிருக்கிறார். மேலும் பொள்ளாச்சியில் வைத்து உட்கட்சி தேர்தலை நடத்தாமல் சென்னையில் வைத்து நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவு பெற்ற ஒருவரே பொள்ளாச்சி திமுக நகரச் செயலாளராக வர முடியும் என்கிற சூழலில், டாக்டர் வரதராஜன் தரப்பு அமைச்சருக்கு எதிராக பேசி வம்பில் சிக்கியுள்ளது. இதேபோல் ஏற்கனவே தென்றல் செல்வராஜ், தமிழ்மணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தலைமை அதிருப்தியில் இருப்பதாலும் வரதராஜனுக்கு எல்லோரையும் அணுசரித்து செல்லும் ஆற்றல் குறைவு என்பதாலும் புதியவர் ஒருவர் அதுவும் இளைஞரணியை சேர்ந்த ஒருவருக்கு தான் கட்சி மேலிடம் புரோமோஷன் வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி நகரை பொறுத்தவரை வளம் கொழிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் அங்கு நகரச் செயலாளர் என்ற பசையுள்ள பதவியை பிடிக்க இந்தளவுக்கு போட்டி கடுமையாக உள்ளது. இதனிடையே பொள்ளாச்சி நகரச் செயலாளர் பதவிக்கான உட்கட்சித் தேர்தல் சென்னையில் நடைபெறுமா அல்லது ஊரிலேயே சுமூகமாக நடைபெறுமா என்பது தான் உள்ளூர் உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.

 


Comments