ஆன்லைன் ரம்மி' விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்த நபர், துாக்கிட்டு தற்கொலை!!

   -MMH 
   போரூர்: ஆன்லைன் ரம்மி' விளையாடி பல லட்சம் ரூபாய் இழந்த நபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போரூர், விக்னேஸ்வரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரபு, (39). இவரது மனைவி இந்து,(36). 

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மொபைல் போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த பிரபு கொரோனா காரணமாக வேலையை இழந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது மனைவி வெளியே சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது பிரபு துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த போரூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

இதில், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த பிரபு, பல லட்சம் ரூபாயை இழந்தது தெரியவந்தது. வீட்டுக் கடன் அடைக்க அவரது தந்தை கொடுத்த 20 லட்சம் ரூபாய், 'கிரெடிட் கார்டு' வாயிலாக வங்கியில் பெற்ற, 15 லட்சம் ரூபாய் கடன் என, மொத்தம் 35 லட்சம் ரூபாய் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். 

மேலும், ஓராண்டாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், குடிப்பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வங்கியில் இருந்தும் அழுத்தம் வந்ததால், மன விரக்தியடைந்தவர் தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிரபுவின் மனைவி, குடும்பங்களை சீரழிக்கும் 'ரம்மி' உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேதனையுடன் தெரிவித்தார்.

-வேல்முருகன் சென்னை.

Comments