வால்பாறை படகு இல்ல வேலை முடிந்து பயன்பாட்டுக்கு வருவது எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு!!

 

-MMH

    வால்பாறையில் படகு இல்லம் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், நீர் நிறைந்த ஏரியை ஏமாற்றத்துடன் பார்த்து விட்டு, சுற்றுலா பயணியர் திரும்பி செல்கின்றனர். வால்பாறை நகரில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் நகராட்சி சார்பில், ரூ.5.6கோடி மதிப்பீட்டில், தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பூங்கா அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கும் பணி கடந்த, 2020, பிப்.,மாதம் பூமி பூஜையுடன் துவங்கியது.பணி முற்றிலுமாக நிறைவடையாத நிலையில், கடந்தாண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, படகு இல்லம், தாவரவியல் பூங்கா அவசர கோலத்தில் அதிகாரிகளால் திறக்கப்பட்டது. ஆனால் சுற்றுலா பயணியர் செல்ல இதுவரை அனுமதிக்கப்படவில்லை.படகு இல்லம் அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், வால்பாறையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணியர், படகு இல்லம் திறக்காமல் இருப்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'சட்டசபை தேர்தலால் படகு இல்லம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள பணிகளும், முடிக்கப்பட்டு, விரைவில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் செய்து தரப்படும்,' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments