குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு வழங்க முடிவு! கடும் அதிர்ப்தியில் பணியாளர்கள்!!

 

-MMH

கோவை மாநகராட்சியில், குப்பை அள்ளும் பணியை தனியாருக்கு வழங்க, தொழிலாளர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும், 21ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. கோவை மாநகராட்சி பகுதியில், 5 லட்சத்து, 21 ஆயிரத்து, 851 குடியிருப்புகள் உள்ளன. நாளொன்றுக்கு, 625.50 டன் மக்கும் குப்பை, 411.50 டன் மக்காத குப்பை சேகரமாகிறது. பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில் சேகரமாகும் குப்பை தனியார் நிறுவனத்தால், வெள்ளலுார் கிடங்கில் மேலாண்மை செய்யப்பட்டு உரமாக்கப்படுகிறது.

கழிவுகள் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. தரம் பிரித்து குப்பை சேகரிக்க, 370 வாகனங்கள் தேவை; 105 வாகனங்கள் வாங்க நிர்வாக அனுமதி பெற்று, கொள்முதல் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இன்னும், 265 வாகனங்கள் தேவைப்படுகிறது. போதிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள், தொட்டிகள், வாகன வசதிகள் இல்லாததால், நகரில் பல்வேறு இடங்களில் குப்பை அகற்றும் பணி தொய்வாக நடக்கிறது. அதனால், பரீட்சார்த்த முறையில், சென்னை மாநகராட்சியில் இருப்பதுபோல், ஒரு மண்டலத்தில் சுகாதார பணிகளை தனியார் மூலம் மேற்கொள்ள, மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதில், மத்திய மண்டலத்தில் மட்டும், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 936 குடியிருப்புகள் உள்ளன. 458 குப்பை தொட்டிகள், 83 வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. 537 ஆண் தொழிலாளர்கள், 364 பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 540 எண்ணிக்கையில் மழைநீர் வடிகால் துார்வாரும் பணியாளர்கள், ஒப்பந்த முறையில் இருக்கின்றனர். இம்மண்டலத்தில் துாய்மை பணியை, தனியார் நிறுவனத்துக்கு வழங்கினால், வாகனங்கள் மற்றும் பணியாளர்களை, பற்றாக்குறையாக உள்ள மற்ற நான்கு மண்டலங்களுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு, கோயமுத்துார் லேபர் யூனியன், கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக் கின்றனர். வரும், 21ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி, தெற்கு தாசில்தார் அலுவலகம் முன், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். துாய்மை தொழிலாளர்கள் கூறுகையில், '10 ஆண்டுகளுக்கு மேலாக, ஒப்பந்த முறையில் பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய, கோரிக்கை விடுத்து வருகின்றனர். மீண்டும் தனியாரிடம் வழங்கினால், பணி நிரந்தரம் செய்வதற்கே வாய்ப்பில்லாமல் போய் விடும். துாய்மை தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கு நேர்மாறாக மாநகராட்சி செயல்படுகிறது' என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments