"அம்மா" சிமெண்ட் இல்லாததால் "சும்மா" கிடக்கும் கட்டிட பணிகள்!! "வலிமை" க்காக காத்திருப்பு!!!

 -MMH 

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த ஆறு மாதமாக அம்மா சிமென்ட் சப்ளை இல்லாததால், ஏழை, நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெளிச்சந்தையில் சிமென்ட் விலை மிக அதிகமாக இருந்ததால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகினர்.இதையடுத்து, கடந்த, 2015ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு, அம்மா சிமென்ட் அறிமுகம் செய்தது. ஊராட்சிகளில், 1,500 சதுர அடிக்குள், வீடு கட்டுவோருக்கு, ஒரு மூட்டை, 190 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. அதிகபட்சமாக, ஒருவருக்கு, 750 மூட்டைகள் வழங்கப்பட்டன. வீடுகளில் பராமரிப்பு பணி செய்ய, அதே விலையில், 25 மூட்டைகள் வழங்கப்பட்டன.

இதனால், கிராமப்பகுதிகளில் உள்ள, வீடு கட்டும் ஏழை, நடுத்தர மக்கள் பயனடைந்தனர். கடந்த ஓராண்டுக்கு முன், இந்த சிமென்ட்டின் விலை, 26 ரூபாய் உயர்த்தப்பட்டது. எனினும் வெளிச்சந்தையை விட, 150 ரூபாய் குறைவு என்பதால், அம்மா சிமென்ட்டை கேட்டு, ஏழை மக்கள் யூனியன் அலுவலகங்களுக்கு வந்து சென்றதை பார்க்க முடிந்தது. 

இந்நிலையில், கடந்தாண்டு இறுதிவரை தடையில்லாமல், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்த, அம்மா சிமென்ட், படிப்படியாக குறைந்து வந்தது. டிசம்பர் இறுதியில், கடைசியாக சப்ளை செய்யப்பட்டது.

அதற்கு பிறகு, ஆறு மாதமாகியும் தற்போது வரை சிமென்ட் சப்ளை செய்யப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள, 12 யூனியன் அலுவலகங்களிலும் இதே நிலை தான் உள்ளது.இதனால், சிமென்ட் மூட்டைகள் கேட்டு விண்ணப்பித்தவர்கள், யூனியன் அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகின்றனர். இன்னும் வரவில்லை என்பதே அதிகாரிகளின் பதிலாக உள்ளது. இதனால், வீடு கட்டும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில்' தமிழக அரசு சார்பில் 'வலிமை' என்ற பெயரில் புதிய சிமென்ட் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அந்த சிமென்ட் வந்தவுடன் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.பொதுமக்கள் கூறுகையில்,' தற்போதைய நிலையில் மணல், கம்பி விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. கோவையில் செங்கல் கிடைக்காமல், அதிக விலை கொடுத்து, வெளி மாவட்டங்களில் இருந்து வாங்க வேண்டி உள்ளது. தற்போது, சிமென்ட்விலை, 430 ரூபாய்க்கு மேல் சென்று விட்டது.

விலை ஏற்றத்தால் வீடு கட்ட முடியாமல் தவிக்கிறோம். அம்மா சிமென்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஆறு மாதங்களாகி விட்டது. சிமென்டும் வரவில்லை. வீடும் கட்ட முடியவில்லை. அரசு உடனடியாக குறைந்த விலையிலான சிமென்ட் மூட்டைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் எங்களின் புது வீடு கனவு நினைவாகும்' என்றனர்.

உங்கள் வலிமை சிமென்ட் வருவதற்குள் பிற கட்டுமான மூலப்பொருட்களின் விலை உச்சத்தை தொட்டு இருக்கும். பல மாதங்களாக காத்திருக்கும் மக்களின் சொந்த வீட்டு கனவு கேள்விக்குறியாக்கப் பட்டுவிடும் என்பதால், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் காரணம் கூறாமல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments