கோவையில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது! பொதுமக்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தல்!!

 -MMH 

கோவையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கோவை மாநகராட்சி, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்துார், சூலுார் போன்ற பகுதிகளில், வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அதனால் மாவட்டத்தில், ஆர். டி.பி.சி.ஆர்., பரிசோதனைகள் நாளொன்றுக்கு, 300 - 600 பேருக்கு எடுக்கப்பட்டு வந்தது.

தற்போது, 1,500 - 2,200 பேர் வரை, பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.நோய் பாதிப்பு அதிகரிப்பதால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. சில மாதங்களாக தொற்று பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் இருந்த சூழலில் தற்போது பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவையில் 200க்கும் மேற்பட்டோர் தற்போது, வீடுகளிலும், மருத்துவ மனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஒரு நாளின் புதிய பாதிப்பு, 50 என்ற அளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது, சுகாதாரத்துறை, 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. முதல் டோஸ் போடாதவர்கள், இரண்டு டோஸ் செலுத்தி பூஸ்டருக்கான அவகாசம் முழுமை பெற்றவர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

பொதுக்கூட்டம், திருவிழா, திருமணம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பள்ளி, கல்லுாரி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சமூக இடைவெளியை கடை பிடித்து, 'மாஸ்க்' அணிய வேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், 'மாஸ்க்' அணியாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கும் நடைமுறை, மீண்டும் விரைவில் அமல்படுத்தப் படவுள்ளது.இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:

கொரோனா பாதிக்கப்படும் நபர், அவரின் குடும்ப உறுப்பினர், அவருடன் தொடர்புடைய நபர்கள் என, அனைவரையும் கொரோனா பரிசோதனை உட்படுத்தி கண்காணித்து வருகிறோம். பொது இடங்களில் மக்கள் அனைவரும், சமூக இடைவெளியை கடை பிடித்து, முக கவசம் அணிய வேண்டும். வரும் நாட்களில் முக கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். 

பஸ் ஸ்டாண்டுகளில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ளவேண்டும். 15-18 வயதுள்ள குழந்தைகள் பலர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும்.சமூக பரவலாக மாறாமல் தடுக்க, அதிகாரிகள் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க மாவட்ட நிர்வாக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 750 படுக்கை, அரசு மருத்துவமனையில், 100 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அன்னுார் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் கூறுகையில், "கடந்த ஒரு வாரமாக தொற்று மீண்டும் ஏற்பட்டு வருகிறது. புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்," என்றார்.முதல், இரண்டு, மூன்றாம் அலை முடிந்து பிள்ளைகள் தற்போது தான் வழக்கம் போல் உற்சாகமாக பள்ளிக்கு செல்கின்றனர். அனைத்தும் இயல்புக்கு திரும்பியுள்ள நிலையில், நம் அஜாக்கிரதை ... அதை முடக்கவிடலாமா என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும். ஆகவே, அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments