மருத்துவமனையை தாக்கிய மருத்துவர்!!

     -MMH 

கோவை சத்தி ரோட்டில் அமைந்துள்ளது எல்லன் மருத்துவமனை. இந்த மருத்துவமனையை டாக்டர் உமா சங்கர் என்பவர் சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றி ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி வந்தார். ஒப்பந்தப்படி தொகை வழங்குவதில் அவருக்கும், டாக்டர் ராமச்சந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், 2020 டிச, 4ம் தேதி மருத்துவமனைக்குள் புகுந்த குண்டர்கள் கும்பல், நோயாளிகளை அடித்து விரட்டியது. ஊழியர்களையும் தாக்கியது மருத்துவமனையை சூறையாடியது. விசாரணை நடத்திய போலீசார் டாக்டர் உமா சங்கர் அவரது மேலாளர் மருதவாணன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமினில் வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் பலியானார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் டாக்டர் ராமச்சந்திரன் தான் கூலிப்படையினரை அனுப்பி மருத்துவமனையை தாக்கினார் என்பது கண்டறியப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமச்சந்திரன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று டாடாபாத்தை சேர்ந்த கேபிள் ராஜா (38) ரத்தினபுரியை சேர்ந்த சுரேஷ்(33) சிவானந்தா காலனியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன்(33) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் கூலிப்படையினர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மூவருக்கும் தலா 1,500 ரூபாய் பணம் கொடுத்து அழைத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வக்கீல் ஒருவர் உட்பட மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments