கோவளம் கடற்கரையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு!!

 -MMH 

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரைக்கு ஒன்றிய அரசின் சார்பில் நீலக்கடற்கரை என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவளம் கடற்கரையில் அதிநவீன உணவகம், விளையாட்டுக் கூடம், ஓய்வு அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன. 

இவற்றை நேற்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர் மதிவேந்தன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவிலேயே சுற்றுலா வளர்ச்சியில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

தமிழக கடற்கரைகளிலேயே கோவளம் கடற்கரைக்கு நீலக்கடற்கரை என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்குடன் கழிக்கும் வகையில் உணவகம், விளையாட்டு உபகரணங்கள், தங்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை முதல் இரவு வரை கடற்கரை பகுதியை சுத்தமாக வைத்திருக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலில் குளிக்கத் தேவையான பாதுகாப்பு கருவிகளும் உள்ளது.

அதுமட்டுமின்றி எப்போதும் நீச்சல் வீரர்கள் இருப்பார்கள். இவர்கள் கடலில் தவறி விழும் நபர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபடுவர். இதற்காக குறைந்த அளவிலான கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்ட மக்கள் மன உளைச்சலுடன் இருந்த காலகட்டத்தில் அவர்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த நீலக்கடற்கரை உள்ளது. 

மேலும், இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்குழா கடற்கரை, திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கடற்கரை ஆகியவற்றை அனைத்து வசதிகளுடன் நவீனப்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறோம்' என்றார். இந்த ஆய்வின்போது ஒன்றிய ஆணையாளர் பூமகள் தேவி, கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர், துணைத்தலைவர் ஆதிலட்சுமி பெருமாள், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக முட்டுக்காடு படகுத்துறை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் இராஜாராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

-கார்த்திகேயன் தண்டையார் பேட்டை.

Comments