பேருந்து வசதி இல்லாததால் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போன பரிதாபம்!!

   -MMH 

   பொள்ளாச்சி அருகே, பஸ் வசதி இல்லாததால் 34 பழங்குடியின மாணவர்கள் உட்பட 41 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 5ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடந்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி சேத்து மடை அரசு உயர்நிலைப் பள்ளியில் 86 மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

இதில் டாப்சிலிப், பழைய மற்றும் புதிய சர்க்கார்பதி, நாகரூத்து உள்ளிட்ட வனப்பகுதியிலிருந்து வரும், 34 பழங்குடியின மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இவர்களுக்கு போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், தினமும் வகுப்புக்கு வர முடியாததுடன் தேர்வும் எழுத முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளி கல்வித்துறையினர் விளக்கம் கேட்டு விசாரிக்கின்றனர். 

பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் கூறியதாவது: "பள்ளியில் மொத்தம் 86 பேர் பத்தாம் வகுப்பு படித்தனர். இவர்களில் 34 பழங்குடியின மாணவர்கள் உட்பட, 41 பேர் தேர்வு எழுதவில்லை. பள்ளிக்கு அருகிலுள்ள அண்ணாநகரில் இருந்து வரும் 10 மாணவர்களும் வனத்தில் பஸ் வசதி கிடைக்காததால் 24 மாணவர்களும் தேர்வு எழுதவில்லை. பஸ் வசதி இல்லாததால் அவர்கள் பள்ளிக்கு வருவது சிரமமாக உள்ளதால் நீண்ட நாள் விடுப்பில் இருந்தனர். பத்தாண்டுக்கு முன் ஆட்டோ பயன்படுத்தி பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். பின் திட்டம் நிறுத்தப்பட்டது". இவ்வாறு கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments