சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!! மாநகராட்சி அறிவிப்பு!!

    -MMH 

 சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 4-ம் தேதி நிலவரப்படி 5,936 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி ஒரே நாளில் 942 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

வீட்டில் தனிமையில் உள்ள 5,264 பேரை தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து தொடர்புகொண்டு, அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்து, உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சந்தைப் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும்போது தவறாது முகக் கவசம் அணிய வேண்டும். அதேபோல, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி மக்களை அனுமதிக்க வேண்டும். மேலும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதை, அந்தந்த நிறுவனமே உறுதி செய்ய வேண்டும்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள, அந்தந்த வார்டுக்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு இன்று முதல் (ஜூலை 6) தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கரோனா தடுப்பூசி 2-ம் தவணை போட்டுக் கொள்ளாத 8,68,930 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 3,76,917 பேரும், மாநகராட்சியின் சுகாதார மையங்களில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்."

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பேருந்துகள், திரையரங்குகள், திருமண மண்டபங்களில் கரோனா விதிமுறைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது இன்றியமையாதது.

திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் மக்கள் அதிகம் கூடும்போது, கரோனா தொற்று அதிக அளவு பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, திரையரங்குகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில், பொதுமக்கள் அதிக அளவில் இருந்தால், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும்படி, சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும். வணிக நிறுவனங்கள், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க, பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரை கட்டாயம் முகக் கவசம் அணியவும், பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிவதை நடத்துநர் உறுதி செய்யுமாறும் அறிவுறுத்த வேண்டும்.

பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பணிமனையின் மேலாளர், சம்பந்தப்பட்ட மண்டல நல அலுவலரை அனுகினால், பணிமனையிலேயே தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

-வேல்முருகன் சென்னை.

Comments