இரவு கடைகளில் தொந்தரவு கூடாது; போலீசுக்கு டி.ஜி.பி.உத்தரவு..!!

 

-MMH

இரவு நேரங்களில் சட்ட விதிகளின்படி செயல்படும் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் தலையிடக் கூடாது' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டப்படி, பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்கலாம் என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து. சென்னை உயர் நீதிமன்றமும் சில வழிகாட்டு நெறிமுறைகளை, காவல் துறைக்கு ஏற்கனவே வழங்கி உள்ளது.

அரசாணை மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.எனினும், சில இடங்களில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், இரவில் இயங்கும் கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை மூடுமாறு வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

சட்ட விதிகளின்படி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் போன்றவற்றின் வணிகச் செயல்பாடுகளில், குறிப்பாக இரவு நேரங்களில் குறுக்கிடக் கூடாது. அதே வேளையில், சட்ட விரோதச் செயல்களோ, தடை செய்யப்பட்ட செயல்பாடோ கண்டறியப்பட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அப்துல் ரஹீம் திருவல்லிக்கேணி.

Comments